தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் ஆவதும், நடிகர்கள் இயக்குனர்கள் ஆவதும் சகஜமாக அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. மணிவண்ணன் மனோபாலா பாரதிராஜா மிஷ்கின் சேரன் பார்த்திபன் கே பாக்யராஜ் பாண்டியராஜன் என இப்படி பல இயக்குனர்கள் நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றனர்.
இதில் சில இயக்குனர்கள் காமெடி ரோல்களில் நடித்து வருகின்றனர். சிலர் குணச்சித்திர கேரக்டர் நடிகர்களாக நடிக்கின்றனர். சிலர் ஹீரோக்களாகவும் நடித்து பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்தவர் இயக்குனர் கஸ்தூரிராஜா.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள் செல்வராகவன், தனுஷ் ஆகியோர் இயக்குனர்களாக இருந்தாலும் அப்பா கஸ்தூரிராஜாவை அவர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைத்தது இல்லை. ஆனால் 2 மாதங்களுக்கு முன் வெளிவந்த விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தில் கஸ்தூரி ராஜா, அப்பா கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் கஸ்தூரிராஜா நடிகராக அறிமுகமானபோது அவரது வயது 73. இதற்கு முன்பே இயக்குனர் விசு இயக்கிய பெண்மணி அவள் கண்மணி உள்ளிட்ட ஒரு சில படங்களில் சில காட்சிகளில் இளமையான தோற்றத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரை போலவே 70 வயது கடந்த நிலையில் ஒரு நடிகராக இப்போது அறிமுகமாக இருப்பவர் இயக்குனர் கங்கை அமரன். அவருக்கு வயது 77 ஆகும்.
கங்கை அமரன் இயக்குனர் மட்டுமல்ல, இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர் டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். இதற்கு முன்பு சில படங்களில் ஓரிரு காட்சிகளில் கங்கை அமரன் நடித்திருக்கிறார். ஆனால் முதல்முறையாக முழு படத்திலும் நடிகராகவே அவர் வருகிறார். அந்த படத்தின் பெயர் லெனின் பாண்டியன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் கணேசன் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இதில் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகராக அறிமுகமாகும் தனது அப்பா கங்கை அமரனுக்கு அவரது மூத்த மகன் இயக்குனர் வெங்கட் பிரபு தனது வலைதள பதிவில், நடிகராக அப்பா அறிமுகமாவது மகிழ்ச்சி. படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு சில படங்களில் நடித்தவர். மேலும் விஜய் நடித்த தி கோட், அஜீத் குமார் நடித்த மங்காத்தா, சிம்பு நடித்த மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





