சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1 படங்களை இயக்கியவர் எச் வினோத். நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர். இப்போது விஜய் நடிப்பில் தளபதி 69 படத்தை இயக்கி வருகிறார். அஜீத்குமாருடன் 3 படங்களில் பணிபுரிந்துள்ள எச் வினோத், அஜீத்குமார் குறித்து ஒரு நேர்காணலில் வெளிப்படையாக சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
அஜீத்குமார் குறித்து இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் கூறியதாவது, நடிகர் அஜீத்குமார் அவரது அக்கவுண்ட்ஸை அவரேதான் பார்த்துக்கொள்வார். அவரது அக்கவுண்ட்ஸை அவரே அழகாக மேனேஜ் பண்ணுவார். அவரது பைனான்ஸை அவரே பார்த்துக்கொள்கிற ஒரு பிரமாதமான அக்கவுண்டன்ட் ஆக அஜீத்குமார் இருக்கிறார்.
அவர் மற்றவர்களுக்கு சொல்கிற அட்வைஸ் இதுதான். உங்களுடைய வருமானத்தை சரியாக கையாள வேண்டும். நீங்கள் வருமான வரி கட்டுபவராக இருந்தால், உங்களுக்கு வரும் வருமானத்தில், கட்ட வேண்டிய பணத்தை தனியாக வங்கி கணக்கில் போட்டு வைத்து விடுங்கள். அந்த பணம் உங்களுடையது இல்லை என்ற எண்ணத்தில், அதை வங்கியில் போட்டு விடுங்கள்.
அப்போதுதான் வரி செலுத்தும் போது உங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இருக்காது. அதை ஏமாத்தலாமா, தப்புக்கணக்கு காட்டலாமா என்ற எந்த எண்ணமும் வராது. அதுபோக மீதி இருக்கிற பணத்தில் 10 சதவீதம் எடுத்து சாரிட்டிக்கு என்று வைத்து விடுங்கள். நீங்கள் கண்டிப்பாக வசதியாக இருக்கும் போது 4 பேருக்கு உதவிகள் செய்யலாம்.
உதவி என்று கேட்டு வரும் சரியான நபர்களுக்கு அந்த பணத்தை கொடுத்து உதவ, அந்த பணத்தை இப்போதே எடுத்து வைத்து விடுங்கள். அதுபோக மீதி பணம் தான் உங்களுடையது. அதை வைத்து உங்களது தேவைகள், ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். மத்த விஷயங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்த திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இப்படி செய்வதால் உங்களுக்கு எந்தவிதமான குழப்பமும் இருக்காது. லாங் ஸ்டெப் வைத்து மாட்டிக்கவும் மாட்டோம். சரியாக பணத்தை செலவு செய்ய தெரியாமல் முழிக்கவும் மாட்டோம் என்றுதான் நிறைய பேருக்கு அஜீத்குமார் அட்வைஸ் பண்ணுவார் என, இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார். இது ஏகே ரசிகர்களுக்கு புதிய தகவலாக இருப்பதால், பணம் விஷயத்தில் இப்படி ஒரு சூப்பர் விளக்கம் தந்திருக்கிறாரே என ஆச்சரியப்படுகின்றனர்.





