நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் இப்போது வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பதிவில் ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பதாவது, சினிமாவை நேசிப்பவனாக சில யோசனைகள் சொல்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சல்லியர்கள் படத்திற்கு தியேட்டர்கள் இல்லை. விஜய் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜனநாயகன் படம் நாளை வெளியாக இருந்த நிலையில் சென்சார் தாமதம் காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மறுநாள் 10ம் தேதி வெளியாக இருந்த பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் வழங்கப்படாததால் பல இடங்களில் தியேட்டர்களில் முன்பதிவு துவங்கவில்லை. சினிமாவுக்கு இது கடினமான காலம். தியேட்டர்கள் சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிக ஆதரவை தர வேண்டும். பெரிய படங்களுக்கு சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் கிடைப்பது போல சிறிய படங்களுக்கு கிடைப்பதில்லை.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரே வருவாய் ஆதாரம் தியேட்டர்கள் மட்டுமே. ஆனால் தியேட்டர்களில் அந்த படங்களை வெளியிட தயங்குவது சினிமாவை அழிக்கும். திரைப்பட சென்சார் நடைமுறைகளில் தற்போது பின்பற்றப்படும் கடுமையான காலக்கெடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாட்டு சென்சார் அமைப்புகளின் விதிமுறைகள் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களை வெளியீட்டுக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே முழுமையாக தயாரித்து முடிக்க வேண்டும் என்ற நிலை நடைமுறையில் சாத்தியமற்றது. இது போன்ற பல விஷயங்கள் உள்ளன. இதை நெறிப்படுத்த வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இது சற்று எளிதாக்கப்பட வேண்டும். இல்லையெனில் பண்டிகை நாட்களில் கூட பெரிய படங்களை வெளியிட முடியாமல் ஒத்தி வைப்பது இறுதியில் இந்த சினிமா துறையையே அழித்துவிடும்.
ரசிகர்கள் சண்டைகள் அரசியல் காரணங்கள் தனிப்பட்ட விரோதங்கள் வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு திரைப்பட சகோதரத்துவத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கலையை காப்பாற்ற வேண்டும். சினிமாவை காப்பாற்றுங்கள் என்று அந்த பதிவில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார். ஜனநாயகன் பராசக்தி படங்களுக்கு கடும் இடையூறுகள் உருவான நிலையில் அவரது இந்த பதிவு இணையத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.





