மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கல்லூரியில் படித்த காலத்தில் மாணவராக சில குறும்படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். பிறகு சென்னையில் வங்கியில் வேலை கிடைத்து 2 ஆண்டுகள் வங்கியில் பணிசெய்திருக்கிறார். பிறகு மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பை, வெற்றியை பெற்றார்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்து சினிமா தொழில் கற்றுக்கொள்ளாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கியவர். மாநகரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் கைதி விஜய் நடிப்பில் மாஸ்டர் கமல் நடிப்பில் விக்ரம் என மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.
அதன்பிறகு மீண்டும் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கிய அவர், இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வருகிறது. கார்த்தி விஜய் ரஜினி கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
இந்நிலையில் நடிகராகவும் லோகேஷ் கனகராஜ் அவதாரம் எடுக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளார். அதுவும் அதிரடி சண்டை படமாக இது உருவாக உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி சில படங்களை தயாரித்த வகையில் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிள்ளைகள் இருக்கின்றனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர், தனது குடும்பம் குறித்து கூறியதாவது, என்னுடைய அப்பா பஸ் கண்டக்டராக பணிசெய்தவர். என்னுடைய அம்மா இல்லத்தரசி. வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஸ்டேஷனரி கடையும் வைத்திருந்தோம்.
எங்கள் பெற்றோருக்கு நாங்க 2 பசங்க. நான் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கே வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் பணிசெய்தேன். அதன்பிறகுதால் சினிமா ஆர்வத்தில் இயக்குனராக மாறி மாநகரம் படத்தை டைரக்ட் செய்தேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





