இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து அவர் இயக்கிய கைதி விக்ரம் மாஸ்டர் லியோ படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இப்போது அவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். அடுத்து அவர் கைதி படத்தின் 2ம் பாகத்தை துவக்க இருப்பதாகவும் அதற்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராம் சரண் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை அவர் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் இப்போது நீடித்துவரும் பல பிரச்னைகளில் ஒன்றாக, படங்களின் நீளம் என்பது பெரிய தலைவலியாக மாறி வருகிறது. அதிலும் சில இயக்குனர்கள் இரண்டரை மணி நேர படத்தை 5 மணி நேரம் 6 மணி நேரம் வரை எடுத்துவிட்டு, பிறகு அதை 3 மணி நேரமாக திரையில் கொண்டு வந்து ரசிகர்களை பாடாய்படுத்தி விடுகின்றனர்.
அத்துடன் 2ம் பாகமாக எடுக்கப்படும் படங்கள் நாளடைவில் 3ம் பாகம் 4ம் பாகம் என பிரிக்கும் அளவுக்கு படங்களின் நீளம் அதிகரித்து விடுகிறது. இப்படி நீளம் அதிகமானதால் தேவையற்ற காட்சிகளை நீக்கும்போது படத்தின் முக்கிய காட்சிகளே அப்படி நீக்கப்படும் சம்பவங்களும் நடந்து விடுகின்றன. இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் அப்படி நடந்துவிட்டதாக அவரே கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, நான் எடிட் பண்ணின மாதிரி தான் ஷூட்டே பண்ணுவேன். எனக்கு இந்த கட் போதும்னா இந்த கட் போதும். அதுக்கு மேல எக்ஸ்ட்ரா என்று கூட எடுக்க மாட்டேன். எக்ஸ்ஸாட்டா இந்த பாயிண்டுல நான் எடுக்கும் போது இது கட்டிங்கு தான், இது ஒய்ல்டுலதான் இது குளோஸ்லதான் என்ற முடிவில், எக்ஸ்ட்ரா எடுக்க மாட்டேன்.
அப்படி எக்ஸ்ட்ரா எடுத்தால் நான் தேவையில்லாமல் எடிட் செய்றவருக்கு மூணு நாலு சாய்ஸ் கொடுப்பேன். அவன் என்னை கன்ப்யூஸ் பண்ணிட்டு இருப்பான். அதனால் நான் அதை பண்ண மாட்டேன். அதனால் என்ன தேவையோ அதை கரெக்ட்டா எடுத்திருவேன். நான் இவ்வளவுதான் எடுத்திருக்கேன், எடுக்கலேன்னா என்ன செய்வே, இவ்ளோதான் என்றும் எடிட் பண்ணும்போது சொல்லி விடுவேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.





