மதுரை ராசாக்கூர் பகுதியை சேர்ந்தவர் நடிகர் சூரி. சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து, முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து நாயகனாக வலம் வரும் சூரி அவரது ஆரம்பகால கட்டத்தில் தான் அனுபவித்த கஷ்டங்களையும், சாப்பாட்டுக்கு கஷ்டபட்டதையும் மேடைதோறும் கூறி கண்கலங்குவார். அப்படிப்பட்ட சூரி தனது சொந்த ஊரான மதுரை மாநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். வியாபாரம் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஆனாலும், அவர் நடத்தும் அம்மன் உணவகத்தில், விலைக்கேற்ற தரமில்லை” என்கிற விமர்சனம் கடுமையாக கிளம்பி வருகிறது.
இதுகுறித்து செந்தமிழ் செல்வன் ரமேஷ் என்பவர் தனது முகநூல் பதிவில் நடிகர் சூரி மதுரையில் நடத்தி வரும் அம்மன் உணவகம் பற்றி கடுமையாக விமர்சித்து மேடையில தத்துவம்… கல்லாப்பெட்டியில கந்துவட்டியா சூரி அண்ணே? என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில், சினிமா மேடைகளிலும், ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் நடிகர் சூரி பேசும்போது, அப்படியே புத்தருக்கு அடுத்த நிலைக்குப் போன ஞானி மாதிரி பேசுவதைப் பார்க்க முடிகிறது. சின்ன வயசுல சோத்துக்கே கஷ்டப்பட்டேன், பத்து நாளா வெறும் பச்சைத் தண்ணிய மட்டும் குடிச்சு பசியோட தூங்கின காலமெல்லாம் உண்டு என்று தன் கடந்த கால வறுமையைக் கண்ணீரோடு விவரிப்பார்.
அண்ணே, நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்ததை யாருமே மறுக்கல. அதுக்கு உங்க உழைப்பும், கடவுளின் ஆசியும், இந்த மக்களின் ஆதரவும் இருக்கு. இன்னைக்கு கோடி கோடியா சம்பாதிக்கிறீங்க சந்தோஷம். ஆனா அப்படிப் பட்டினியின் வலி தெரிஞ்ச நீங்க நடத்தும் அம்மன் உணவகத்துல சாதாரண மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்குது? நாங்க உங்ககிட்ட இலவசமாவா சோறு கேட்கிறோம்? உழைக்கிற பாட்டாளி வர்க்கத்துக்கு ஏத்த நியாயமான விலையில கொடுக்கக் கூடாதா? ஒரு டீ ரூ.18, காபி ரூ.23. இதெல்லாம் விடக் கொடுமை… அந்த ஒத்த நெய் பணியாரம் ரூ.18 ரெண்டு குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு கடைக்குப் போனா, ஆளுக்கு ரெண்டு பணியாரம் சாப்பிட்டாலே ரூ.100 முதல் ரூ.200 காலி.
சாதாரண குடும்பங்களுக்கு என்ன அந்த அளவுக்கா வருமானம் கொட்டுது? ஒரு சாப்பாடு ரூ160 + ஜிஎஸ்டி. ஆனா இலையில வைக்கிற 10-15 ஐட்டத்துல ஒண்ணு கூட மனசையோ, வயிற்றையோ திருப்திப்படுத்தல. சாப்பிட்டு முடிச்சதும் நாக்குல நிக்கிற மாதிரி ஒரு டேஸ்ட்டும் இல்லை. அந்தப் பால் பாயாசம்… பச்சைத் தண்ணில ஜவ்வரிசியையும் சேமியாவையும் போட்டு வேக வச்ச மாதிரி இருக்கு. அளவும் பத்தல. அரசு ராஜாஜி ஹாஸ்பிடல் பிராஞ்ச்லயும் இதே கதைதான். தரம் சுமாராக இருந்தாலும் தர்ற அளவோ ரொம்பக் கம்மி. ஒரு மனுஷன் திருப்தியா சாப்பிடவே முடியாது.
அங்கெல்லாம் முடியாத ஒன்னும் நோயாளிகளோ அவங்க கூட உங்களுக்காக ஒரு இருபது ரூபாய்க்கு தயிர் சாப்பாடு தக்காளி சாப்பாடு கூட கொடுக்கலாமில்ல. உங்க ஹோட்டல்ல வாஷ்பேசின் ஸ்டைலா இருக்கு. பாத்ரூம் சுத்தமா இருக்கு. சர்வீஸ் நல்லா இருக்கு. ஆனா ஹோட்டலுக்கு வர்றது பாத்ரூம் பார்க்கவா… பசியாறவா? எங்களுக்கு ஒண்ணும் ஏசி டைனிங் ஹால் வேண்டாம் அண்ணே. வாழை இலையைப் போட்டு, ஒரு ஃபேன் காத்துல, ரெண்டு சுவையான பொரியலோட வயிறார ஒரு அன்லிமிடெட் சாப்பாட்டை ரூ.100 அல்லது ரூ.120-க்கு கொடுக்க முடியாதா? ஒரு டீ, காபியை ரூ.15-க்கும், பணியாரத்தை ரூ.10-க்கும் கொடுக்க மனசு வரலையா?
பக்கத்துல இருக்குற கோயம்புத்தூர்ல சாந்தி கியர் ஹாஸ்பிடல் அப்படிங்கிற இடத்துல பத்து ரூபாய்க்கு ஃபுல் மீல்ஸ் கொடுக்குறாங்க. அஞ்சு ரூபாய்க்கு வெரைட்டி ரைஸ் குடுக்குறாங்க. அதுவும் 70 வயசுக்கு மேல முடியாதவங்களுக்கு இலவசமாகவும் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்களும் மனுஷங்க தானே. கோபுரத்தில் இருக்கிறவன் குப்பைக்கு போறதும், குப்பையில் இருக்கிறவன் கோபுரத்துக்கு வர்றதும் காலத்தோட கணக்கு. பசியோட அருமை தெரிஞ்ச நீங்க, மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம். அட்லீஸ்ட் கிள்ளியாவது கொடுங்க அண்ணே! கொஞ்சம் மனசாட்சியோட யோசிங்க! என்று பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





