இந்திய சினிமாவின் அடையாளமாக ஜாம்பவான் இயக்குனராக கொண்டாடப்படுபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று பிற மொழி சார்ந்த பெரிய நட்சத்திர நடிகர் நடிகைகளே தங்களது விருப்பத்தை தெரிவிக்கும் அளவுக்கு ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக உள்ளார்.
ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் தக்லைஃப் படங்கள் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுவும் நாயகன் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளியில் கமல் மணிரத்னம் இணைந்த தக்லைஃப் படம் ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் பொய்த்துப் போனது.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா ஜிகர்தண்டா பேட்ட இறைவி போன்ற படங்களை தொடர்ந்து இப்போது அவரது இயக்கத்தில் 10வது படமாக டோரதி என்ற படம் கடந்த 25ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் சனந்த் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
டோரதி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகின்றன. பாலின பாகுபாடு பார்க்க கூடாது என்ற கான்செப்ட் அடிப்படையில் உருவான இந்த படத்திற்கு திரை உலகில் இருந்து ஆதரவும் பாராட்டும் அதிகரித்து வருகிறது. டோரதி திரைப்படம் குறித்தும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் குறித்தும் இயக்குனர் மணிரத்னம் பாராட்டி பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மணிரத்னம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, கார்த்திக் சுப்பராஜ் மிக மிக விசேஷமான திறமைசாலி. நம்மிடம் பல நம்பிக்கையளிக்கும் இயக்குனர்கள் உள்ளனர். அவர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் லீடராக இருப்பார் என்று தோன்றுகிறது. இவரது டோரதி திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல். சினிமா மொழி மிக மிக நன்றாக மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது.
சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இதனுடன் இளையராஜா சார் இசையும் சேரும்போது மிக மிக அற்புதமாக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் மணிரத்னம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





