தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் எந்த படம் எடுத்தாலும் பான் இந்தியா என்ற பெயரில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகிறது. பெரிய பட்ஜெட் பெரிய வசூல் என்ற நோக்கத்தில் மட்டுமே பெரும்பாலான படங்கள் இப்படி எடுக்கப்பட்டு வருகின்றன. ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் பல நூறு கோடி ரூபாய் லாபமும் அடைகின்றனர்.
அந்த வகையில் இதுவரை கன்னடம் தெலுங்கு இந்தி படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கின்றன. அந்த வரிசையில் தங்கலான் பதான் ஜவான் ஆர்ஆர்ஆர் கேஜிஎப் 2 பாகுபலி 2 புஷ்பா2 என இந்தி தெலுங்கு கன்னடம் படங்கள் ரூ. 1000 கோடி வசூலை கடந்திருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 படம் 1800 கோடி ரூபாய் வசூலித்தது.
இப்படி மற்ற மொழி படங்கள் எல்லாம் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்னும் ஒரு படம் கூட 1000 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் இருந்தும் மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் இருந்தும் இந்த சாதனை இன்னும் எட்டப்படவில்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மணிரத்னத்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து மணிரத்னம் கூறியதாவது, பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்காக மட்டும் தான் நாம் படம் எடுக்கிறோமா இல்லை நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்கிறோமா என்பதற்கு முதலில் பதில் தெரிய வேண்டும்.
முன்பெல்லாம் படம் நன்றாக இருக்கிறதா சுமாராக இருக்கிறதா இல்லை மோசமாக இருக்கிறதா என்று தான் பேசப்படும். ஆனால் தற்போது பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது. இது போன்ற அழுத்தங்களால் இயக்குனர்களின் கற்பனை திறன் பாதிக்கப்படலாம் இது எதிர்காலத்தில் நடக்காது என நம்புகிறேன் என்று இயக்குனர் மணிரத்னம் கூறியிருக்கிறார்.
1000 கோடி ரூபாய் வசூலை முன்நிறுத்தாமல் ஒரு படம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் மணிரத்னம் கூறியிருக்கிறார். இந்நிலையில் அவரது இயக்கத்தில் வருகிற ஜூன் 5ம் தேதி வெளிவர உள்ள தக்லைஃப் படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாயகன் படம் போல தக்லைஃப் படமும் கமலுக்கு தேசிய விருது பெற்றுத் தருமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





