எண்பதுகளில் காலம் தொட்டு தற்போது வரை சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞன் கமல்ஹாசன். உலக நாயகனாக வலம் வரும் அவர், நம் கற்பனைக்கும் எட்டாத கதாபாத்திரங்களில் நடித்து பற்பல விருதுகளை வென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார். நடிப்பு என்றால் அது கமல்ஹாசன் தான் என்று அடித்துக் கூறும் அளவுக்கு அவர் பாராட்டை பெற்றிருக்கிறார்.
அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் இங்கு ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்து விட்டார். மூன்றாம் பிறை, புன்னகை மன்னன், நாயகன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி, ஆளவந்தான், ஹே ராம், அவ்வை சண்முகி என ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.
2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படத்தை கொடுத்து பாராட்டைப் பெற்ற கமல்ஹாசன் அதன் பிறகு சினிமாவுக்கு சிறிய பிரேக் கொடுத்திருந்தார். சில காலம் திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி கமலஹாசனை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு போய் சேர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த அளவுக்கு கமல்ஹாசனின் பேச்சும் அவர் நடத்திய திறனும் அமைந்தது. இதற்காக ஒரு பெரும் தொகையை அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் சம்பளமாக பெற்றார். வாரத்தின் ஐந்து நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடினாலும் சனி மற்றும் ஞாயிறில் கமலஹாசனை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் டிவி முன்பு திரளும்.
இந்த நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்ட கமல்ஹாசன், தனக்கு பிடித்த புத்தகங்கள் முதல் பல்வேறு விஷயங்களை பகிர்வார். கடந்த ஏழு சீசன்களையும் அவர் தொகுப்பாளராக பங்கேற்று, பாராட்டைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது முக்கியமான முடிவு ஒன்றை கமல்ஹாசன் எடுத்து இருக்கிறார்.
இது தொடர்பாக கடிதம் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தொகுப்பாளராக பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த முடிவை தான் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் காட்டிய அன்புக்கு தான் எப்போதுமே நன்றி கடன் பெற்றிருப்பதாகவும், இந்த அனுபவத்தை தான் எப்போதுமே நினைத்துப் பார்ப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சூழலில் அடுத்த சீசனில் யார் தொகுப்பாளராக பங்கேற்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





