தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படம் மூலம் அறிமுகமான மாரி செல்வராஜ் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவரது முதல் படம் பரியேறும் பெருமாள். 2வது படம் கர்ணன். 3வது படம் மாமன்னன். 4வது படம் வாழை. 5வது படம் பைசன் என்கிற காளமாடன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய 5 படங்களிலும் தமிழ் நடிகைகள் யாரும் கதாநாயகியாக நடிக்கவில்லை. மலையாளம் தெலுங்கு என பிற மொழிகளைச் சேர்ந்த நடிகைகளே அந்த படத்தில் நடித்திருந்தனர். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 6வது படமாக மஞ்சணத்தி என்ற படம் உருவாகிறது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
மஞ்சணத்தி படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிப்பது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். வழக்கமான தனது பாணியில் நெல்லை கிராமப் பின்னணியில் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்ணன் படத்தில் நடிகர் லால் சம்பந்தப்பட்ட ஒரு பாடலில் மஞ்சணத்தி என்ற பாடல் வரிகள் வருகிறது. லால் காதலை அவர் சம்பந்தப்பட்ட பிளாஸ்பேக் காட்சிகளை இந்த படத்தில் அவர் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் பிறமொழி நடிகைகள் நடிப்பதன் மூலம் அவர் தொடர்ச்சியாக தமிழ் நடிகைகளை புறக்கணித்து வருகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.
அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தி நாயகியாக நடித்தார். கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன் நடித்தார். வாழை படத்தில் நிகிலா விமல் நடித்தார். பைசன் காளமாடன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்தார். இந்த படங்களில் தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரது மாமன்னன் படத்தில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடித்தார்.
அவரும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் தான். இப்படி தொடர்ந்து அவரது படங்களில் தமிழ் பெண்களுக்கு அக்கா உள்ளிட்ட மற்ற வேடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அவர்களை கதாநாயகியாக மாரி செல்வராஜ் நடிக்க வைப்பதில்லை. கேட்டால் கலைக்கு மொழி கிடையாது என்பார் என்று தமிழ் நடிகைகள் அவர் மீது புகார் கூறுகின்றனர்.





