இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையேயான மனக்கசப்பு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் இளையராஜாவை எப்போதும் அப்பா என்று தான் அழைப்பேன். ஆனால் ஒரு நாள் என்னை அழைத்து இனி நீ என்னை அப்பா என்று அழைக்கக்கூடாது என்று கூறினார். அது மிகவும் என்னை வேதனைப்படுத்திய வார்த்தை. அன்று முதல் நான் அவரை ஐயா என்றுதான் அழைத்து இருக்கிறேன். எங்களுக்குள் ரீ ரெக்கார்டிங் பணியின்போது வித்தியாசமான அணுகுமுறை வர ஆரம்பித்தது.
அவர் இசையமைக்கும் போது சில சமயம் நன்றாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் ஒரு இயக்குனராக ஒரு படத்தில் காட்சிக்கான தேவை என்ன என்பதை அவரிடம் விளக்க வேண்டி இருக்கும். ஒரு காட்சியில் அதிக தீவிரத்தை காட்டி அவர் இசையமைத்திருப்பார். இதனால் நான் போஸ்ட் ப்ரோடுக்ஷன் போது, அந்த இசையை வேறு இடத்தில் மாற்றி இருப்பேன். ஆனால் இதனை நான் இளையராஜாவிடம் கூற முடியாது.
சைக்கோ திரைப்படத்தின் போது உன்னை நினைச்சு நினைச்சு பாடலுக்கு, ஆறாவது நாள் தான் டியூன் சிக்கியது. நான் காட்சித் தன்மையை அவரிடம் கூறியும் நாள்தோறும் அவர் இசையமைக்கும்போது எனக்கு அது பிடித்தமானதாக அமையவில்லை. நீ பார்த்த பார்வை பாடல் மற்றும் என்னுள்ளே பாடலுக்கு இடையில் தான் இது ஒளிந்து இருக்கிறது, ஒரு கண் பார்வையற்றவன் எப்படி காதலை வெளிப்படுத்துகிறான் என்பதெல்லாம் இதில் வேண்டும் என்று கூறிய பிறகு, புரிந்து கொண்ட இளையராஜா அதற்கேற்றது போல் இசையமைத்தார்.
கபிலனின் பாடல் வரிகளை நான் அவரிடம் எடுத்துக்கொண்டு காட்டிய போது அவருக்கு அது பிடிக்கவில்லை. நானே எழுதுகிறேன் என்று அவர் எழுதினார். ஆனால் அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மூன்று நாளாக கபிலன் எழுதிய வரிகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் எழுதிய போது, நான் மிகவும் எதிர்பார்த்தேன் ஆனால் அந்த வரிகள் மிகவும் சாதாரணமாகவே அமைந்திருந்தன. இன்னும் அந்த காகிதம் என்னிடம்தான் இருக்கிறது.
இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடினால் நன்றாக இருக்கும் என்று நான் கூறினேன். அந்தப் பையன் பாடக்கூடாது என்று இளையராஜா கூறினார். ஆனால் நான் அவர்தான் பாடுவார் என்பதில் உறுதியாக இருந்தேன். இதே போல் அதில் ஒரு பிஜிஎம்மை மாற்ற வேண்டும் என்றும் அவரிடம் கேட்டேன். இதனால் அவர் கடுமையாக கோபம் அடைந்தார். எனது 45 வருட இசை அனுபவத்திற்கு நீ மரியாதை கொடுக்கவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து உன்னை நினைச்சு பாடலை அவர் வேறு ஒருவரை வைத்து ரெக்கார்டிங் செய்தார். ஆனால் நான் அவரது ஸ்டூடியோவில் அவர் இல்லாத போது சித் ஸ்ரீ ராமை வைத்து அந்த பாடலை ரெக்கார்ட் செய்தேன். உடனே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளையராஜா நான் கூறிய நபரை தான் நீங்கள் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார் ஆனால் நான் சித் ஸ்ரீராம் பாடலை தான் வைத்தேன். அந்தப் பாடல் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. நான் இளையராஜாவின் ரசிகராக இல்லாமல் ஒரு இயக்குனராக அங்கு உட்கார்ந்தேன். அன்றைக்கு என் தந்தையை நான் எதிர்க்க வேண்டிய நிலைமையில் இருந்தேன். இனிமேல் நீ என்னிடம் வேலை பார்க்கக்கூடாது என்று இளையராஜா கூறினார். அன்று நான் அழுதேன்” என்று தெரிவித்துள்ளார்.





