நடிகர் கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சிவக்கார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படம், கடந்த 31ம் தேதியன்று தீபாவளி பண்டிகை படமாக வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான அமரன் படம் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
அமரன் படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 104 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எந்த படமும் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரது திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் மிகவும் அழுத்தமாக நடித்துள்ளனர். அதனால் படம் பார்த்த பலரும் அவர்களது நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் அமரன் படம் குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை பாராட்டி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயனும் பதில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தேசப்பற்று திரைப்படமாக அமரன் படம் வெளியாகி உள்ளது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பாஜக மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமலஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது அவரை வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கமல்ஹாசன் தயாரித்த அமரன் படத்தை, மாணவ மாணவிகளுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருப்பதை கமல்ஹாசன் ஏற்று அதை செயல்படுத்துவாரா என்பது பலரது கேள்வியாக எழுந்துள்ளது.





