தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து காதல் எம் மகன் நேபாளி கூடல் நகர் சேவல் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு உள்ளிட்ட பல படங்களில் பரத் நடித்திருந்தார். அவரது நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரில்லர் படம் காளிதாஸ். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பரத் நடித்திருந்தார்.
இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஆன் ஷீத்தல் சுரேஷ் மேனன் ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்போது காளிதாஸ் 2ம் பாகமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்கை பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பரத் அஜய் கார்த்திக் பிரகாஷ்ராஜ் பவானி ஸ்ரீ அபர்ணதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
பூவே உனக்காக பட நாயகி சங்கீதா 25 ஆண்டுகளுக்கு பிறகு காளிதாஸ் 2 படத்தின் மூலம் திரும்பவும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தந்திருக்கிறார். வருகிற ஏப்ரல் 10ம் தேதி காளிதாஸ் 2 படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.இதற்கிடையே சென்னையில் காளிதாஸ் 2 படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்றார்.
விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பேசியதாவது, தமிழ் ரசிகர்கள் சிறிய படங்களுக்கு வரவேற்பு அளிக்கின்றனர். சிறிய படங்களுக்கு தியேட்டர்களும் கிடைக்கின்றன. இங்கு சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் சிறிய படம் யூத் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
நானும் தொடர்ந்து சிறிய படங்களை தயாரித்து வருகிறேன். மேலும் இந்த ஆண்டில் என் தயாரிப்பில் உருவான 2 சிறிய படங்களை திரைக்கு கொண்டு வரும் திட்டமும் உள்ளது. மக்களை நம்பித்தான் படம் எடுக்கிறோம். ஓடிடி நிறுவனங்களை கடந்து தியேட்டர்கள்தான் எங்களது நம்பிக்கை. காளிதாஸ் 2 படத்தை நான் பார்த்து விட்டேன். மூன்று பெண் கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகர் பரத் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜய் கார்த்திக் நடிப்பு மிகவும் அழுத்தமாக உள்ளது.
இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் பின்னணி இசை தூணாக உள்ளது. திரில்லரை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். இன்று தமிழ் சினிமா சின்ன படங்களை மக்கள் விரும்பிப் பார்க்கும் இடத்துக்கு வந்து இருக்கிறது. அதற்கு நிறைய தியேட்டர்கள் ஆதரவும் தருகின்றன. சிறிய சாதாரண கதையை வைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் உழைத்தால் மாபெரும் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறை படம் சிறந்த உதாரணம் என்று பா ரஞ்சித் பேசியிருக்கிறார்.





