போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை. பிறகு அவர், வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அங்கிருந்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படப்பிடிப்பு பணியின் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட இருவரும் பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவனுக்கு நானும் ரௌடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. காதல் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக அதனை அவர் எடுத்திருந்தார்.
இதன் பிறகு அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. திரைக்கதையில் அழுத்தம் இல்லாமல் போர் அடிப்பதாக பலரும் தெரிவித்தனர். இப்படியான சூழலில் தான் அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார் விக்னேஷ் சிவன். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக, அதிலிருந்து இயக்குனர் விலகினார். பிறகு அஜித்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
இப்படியான சூழலில் தான் விக்னேஷ் சிவன் தற்போது பிரதிப் ரங்கநாதனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முதலில் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதாவது எல்ஐகே என்று இயக்குனர் மாற்றினார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும், எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த திரைப்படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில், சாட்டிலைட் உரிமம் உள்ளிட்டவைகளை சேர்த்து ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பட்ஜெட்டில் படத்தை எடுக்க முடியாது எனக் கைவிரித்து விட்டாராம் லலித் குமார். இதற்கு விக்னேஷ் சிவனும் இறங்கி வராததால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் படத்தின் நாயகன் ஆன பிரதிப் ரங்கநாதன் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். தற்போது மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு திரைப்படத்தில் அவர் கவனம் செலுத்த சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





