தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இப்போது அவருக்கு 84 வயதான நிலையில் முதுமை காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா குறித்து சில நாட்களாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சமூக வலைதளங்களில் அவர் உடல் நலம் குறித்து மிகவும் மோசமான தகவல்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை பதட்டமடைய செய்கிறது. அதன் உண்மை தகவலை அறியாமல் அந்த தகவலை பலரும் ஷேர் செய்வதால் பலரிடம் இந்த தவறான தகவல் சென்றடைந்து பரபரப்பை ஏற்படுத்துகிறது.
ஆனால் உண்மையில் பாரதிராஜா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில் இயக்குனர் மற்றும் பெப்ஸி அமைப்பின் தலைவரான ஆர்கே செல்வமணி தலைமையில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இன்று காலை பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, இயக்குனர் பாரதிராஜா குறித்து சில நாட்களாக தவறான தகவல் வருகிறது. இன்று நாங்கள் அவரை சந்திக்க வந்தோம். அவர் ஐசியூவில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அவரை அருகில் சென்று சந்திக்க முடியவில்லை. ஆனால் நேற்று வரை அவரது குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம். அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சொல்வதை மட்டுமே நம்புங்கள். ஆர்வக்கோளாறு காரணமாக தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று ஆர்கே செல்வமணி கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாரதிராஜா உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் பாரதிராஜாவுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. ஐசியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவரது உடல்நிலை சீராக இருந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





