தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டு அரசியலில் குதித்திருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியில் அமருவதே தன் லட்சியம் என அவர் நடத்திய அரசியல் மாநாட்டில் அறிவித்தார்.
தனது அரசியல் எதிரி, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகதான் என்றும் அறிவித்த விஜய், தன் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமாக அறிவித்தார். இந்த மாநாட்டில் விஜய் 48 நிமிடங்கள் பேசினார் என்பதை விட கர்ஜித்தார் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்.
எனினும் வழக்கம் போல, நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் விஜய் வருகை குறித்தும் கிண்டலடித்து வந்தது. எனினும் விக்கிரவாண்டியில் நடந்த அரசியல் மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான கூட்டத்தை பார்த்து அரண்டு போய்விட்டது. ஏனெனில் இது குவாட்டர், கோழி பிரியாணி தராமல் தானாக வந்த கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியல் கட்சியை அறிவித்த போது, தம்பி விஜய் மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறார். அவரும் வரட்டும். அண்ணனாக அவரை வரவேற்கிறேன். எதிர்காலத்தில் அவரும் நானும் இணைந்து தேர்தலை சந்திப்பதை காலம் முடிவு செய்யும். அவர் என்னுடன் பயணிக்க வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பேசிக்கொண்டு இருந்தார்.
ஆனால் விஜய் அரசியல் மாநாட்டை நடத்திய பிறகு, ஒவ்வொரு மேடையிலும் விஜயை தாறுமாறாக சீமான் விமர்சித்து வருகிறார். அவரது கட்சிக்கொடி, கொள்கைகள், அவரது பேச்சை தாறுமாறாக கிண்டலடித்து வருகிறார் சீமான். திமுகவை அரசியல் எதிரியாக விஜய் அறிவித்த நிலையில், சீமான் எதற்கு விஜயை கண்டபடி விமர்சிக்கிறார் என தமிழக மக்களுக்கு ஆச்சரியமும், குழப்பமும் ஏற்பட்டது. இப்போது அதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.
வழக்கமாக சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி, தொடர்ந்து தோல்வியை தான் தழுவி வருகிறது. ஒரு எம்எல்ஏ, ஒரு எம்பி தொகுதி கூட வெல்ல முடியவில்லை. அதனால் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியில் இணைந்து வருகின்றனர். 2026 சட்டசபை தேர்தல் வருவதற்குள் நாம் தமிழர் கட்சி கூடாரமே காலியாகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளதால்தான், சீமான் விஜய் மீது வயித்தெரிச்சலில் இப்படி கொந்தளிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





