ரஜினிகாந்த், கமல் ஹாசன் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே நுழைந்தவர் விஜயகாந்த். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்ந்தவர் ஒருகட்டத்தில் தனக்கென ரசிகர்களை உருவாக்கி கேப்டன் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். அவரது படங்கள் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. குறிப்பாக கிராமங்களில் சக்கைப்போடு போட்டன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பூந்தோட்ட காவல்காரன்.
எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த செந்தில்நாதன் என்பவர் இயக்கிய முதல் படம்தான் பூந்தோட்ட காவல்காரன். கடந்த 1988ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் விஜயகாந்த், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானாலும் முதலி படத்தை பார்த்த இளையராஜா இந்தப் படம் ஓடாது என்று சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் செந்தில்நாதன் அளித்த பேட்டி ஒன்றில், “ பூந்தோட்ட காவல்காரன் படத்தை முடித்த பிறகு ரீ ரெக்கார்டிங்குக்காக இளையராஜா ஸ்டூடியோவுக்கு அனுப்பினோம். படத்தை பார்த்த அவர் அடைக்கலராஜ் என்பவரிடம், ‘பூந்தோட்ட காவல்காரன் என்ற ஒரு படத்தை பார்த்தேன். அது சரியாக வரவில்லை’ என சொல்லியிருக்கிறார். அந்த அடைக்கலராஜ்தான் பூந்தோட்ட காவல்காரன் படத்தின் திருச்சி விநியோக உரிமையை வாங்கியிருந்தார். இளையராஜா அப்படி சொன்னதால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே விஜயகாந்த்துக்கு ஃபோன் செய்து பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற விஜயகாந்த் நேராக இளையராஜாவிடம் சென்று, ஒரு ஏரியாவுக்குத்தான் படம் வித்திருக்கு. நீங்க டபுள் பாசிட்டிவ் பார்க்கும்போது விஷயத்தை வெளில சொல்லாதீங்க. இப்ப பாருங்க பிரச்னை ஆகிடுச்சுனு சொன்னார். அதற்கு இளையராஜாவோ நான் எதார்த்தமாத்தான் யா சொன்னேன் என இளையராஜா கூறிவிட்டார்.
இவை எல்லாம் ராவுத்தரின் காதுக்கு போயிருக்கிறது. உடனே ராவுத்தரோ, படம் நல்லா இல்லனு சொல்றாங்க. இதுக்குமேல் ஏன் செலவு பண்ணனும். ரீ ரெக்கார்டிங்கூட பண்ண வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார். நானும் எதும் செய்யமுடியாமல் எஸ்.ஏ.சந்திரசேகரிடமே உதவி இயக்குநராக மீண்டும் சேர்ந்துவிடலாம் என்ற முடிவில் இறங்கிவிட்டேன். அப்போது விஜயகாந்த் ஆபீஸிலிருந்து அழைப்பு வந்தது.
அங்கு சென்ற என்னிடம், நாளைக்கு ரீ ரெக்கார்டிங் போங்க. படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு இளையராஜாவும் ரீ ரெக்கார்டிங் செய்துவிட்டார். படம் மொத்தமாக ரெடியான பிறகு விநியோகஸ்தர்களுக்கான ப்ரிவ்யூ ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த ப்ரிவ்யூ ஷோவுக்கு விஜயகாந்த்தும், ராவுத்தரும் வர மறுத்துவிட்டார்கள். இல்லை செந்தில் படத்துக்கு நெகட்டிவ் டாக்தான் ஓடுது. அதுனால நீங்களே விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பிச்சிடுங்க என்று சொல்லிவிட்டனர்.
சரி என்று எம்.எம் தியேட்டரி ப்ரிவ்யூ காட்சி விநியோகஸ்தர்களுக்கு போடப்பட்டது. உள்ளே இருந்தால் சங்கடமாக இருக்கும் என நினைத்த நான் தியேட்டருக்கு பின்னாடி போய்விட்டேன். படத்தின் முதல் பாதி முடிந்தது.யாரும் எதுவும் சொல்லவில்லை. படம் மொத்தமாக முடிந்த பிறகு அனைவருமே, யாரு டைரக்டர். செந்தில்நாதன் எங்கே?.. என்ன மாதிரியான படம் எடுத்திருக்கிறீர்கள். அபாரமாக இருக்கிறது. கண்டிப்பாக சூப்பரா ஓடும் என புகழ ஆரம்பித்துவிட்டனர். அப்போது எனக்கு அது ஒரு கனவு மாதிரி இருந்தது” என்றார்.





