தமிழக வெற்றிக் கழகம் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்ட திமுக அதிமுக கட்சிகளை விட தனித்து போட்டியிட்ட தவெக 108 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்கிற நிலையில் 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள தவெக மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளது. இதுதவிர சபாநாயகர் நம்பிக்கை வாக்களிக்க முடியாது என்பதால் கூடுதலாக 1 என்று மொத்தம் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெக கட்சிக்கு தேவையாக உள்ளது.
இதற்கிடையே நேற்று காங்கிரஸ் தரப்பில் 5 எம்எல்ஏக்கள் தவெக கட்சிக்கு ஆதரவு தந்த நிலையில் தவெக பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சபாநாயகர் உட்பட 6 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில் தவெக கட்சி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க தமிழக கவர்னரிடம் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் நேரில் கடிதம் கொடுத்தது.
ஆனால் மொத்தம் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே விஜய்க்கு பதவி பிரமாணம் செய்துவைக்க முடியும் என்று கவர்னர் அர்லேகர் திட்டவட்டமாக கூறி மறுத்து விட்டார். விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டு நேற்று முன்தினமே கடிதம் எழுதிய நிலையில், அவர்கள் ஆலோசித்து விட்டு பதில் சொல்வதாக தாமதித்து வருகின்றனர்.
இதற்கிடையே தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வே பாதுகாப்பு வாகனங்களும் நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டு பனையூரில் இருந்து சென்றுவிட்டன. பனையூர் கட்சி அலுவலகம் நீலாங்கரை விஜய் வீடு முன்பு இருந்த போலீஸ் பாதுகாப்பு மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன.
மேலும் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று விஜய் முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவையும் நிறுத்தப்பட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் பனையூர் தவெக அலுவலகத்தில் தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.





