லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வரும் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. தொடர்ந்து மும்பையிலும் நடந்தது. இதில் இந்தியன் 2 குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை ஷங்கர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.
இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படத்தில், தாத்தா கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்க 40 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இந்தியன் 2 படத்துக்காக அவர் 70 நாட்கள் கால்ஷீட் தந்திருந்தார். அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் அவருக்கான பங்களிப்பு, படம் முழுவதும் இருக்கிறது.
இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் இருந்த போது, இந்தியன் தாத்தாவாக மட்டுமே அவர் கண்ணுக்கும், மனதுக்கும் தெரிந்தார். படப்பிடிப்பில் அவர் இந்தியன் தாத்தாவாக மட்டுமே உலா வந்தார். அவர் இந்தியன் தாத்தா கெட்டப்பில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்து நின்றபோது, அவரை பார்த்து நான் அப்படியே மெய் சிலிர்த்து போய்விட்டேன்.
நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் வருவதற்கு முன்பே, 3 மணி நேரத்துக்கு முன்பாக கமல், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். 3 மணி நேரம் மேக்கப் போட்ட பிறகு, நடிக்க துவங்குவார், பிறகு மாலையில், அல்லது இரவில் நாங்கள் ஷூட்டிங் முடிந்து கிளம்பிய பிறகும் ஒரு மணி நேரம் இருந்து மேக்கப்பை கலைத்துவிட்டு தான் செல்வார். பட்பபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வந்து, தினமும் கடைசி ஆளாக சென்றவர் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நடித்த நாட்களில், அவரால் வழக்கமான உணவு எதுவுமே சாப்பிட முடியாது. தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை மட்டுமே அருந்த முடியும். அப்படிதான் அவர் ஜூஸ், தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டு நடித்தார். அந்த சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.
நான்கு நாட்கள், காலை முதல் இரவு வரை கயிற்றில் தொங்கிக்கொண்டு அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கினோம். அப்போது, பஞ்சாபி மொழி பேசி அவர் கைகளால் வரைந்தபடி நடிக்க வேண்டும். அது எந்த நடிகராலும் சாத்தியமில்லாத விஷயம். அதை இந்த வயதிலும் கமல் செய்து காட்டினார். இன்னும் இன்னும் கடினமான விஷயங்களை அவர் செய்வதற்கு தயாராக இருந்தார் என்று பேசியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.





