தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் வெளிவந்த சில படங்களில் ஏதேனும் ஒரு பழைய படத்தில் நடித்த ஒரு கேரக்டர், சில ஆண்டுகளுக்கு பின் வெளிவரும் படத்திலும் அதே கேரக்டரில் ஓரிரு காட்சிகளில் வருவது வழக்கம். உதாரணமாக படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி ரம்யாகிருஷ்ணன், பாபா படத்தில் அதே நீலாம்பரி கேரக்டரில் வந்து பாபா ரஜினியை பார்த்துவிட்டு, படையப்பா போலவே இருப்பதாக தனது அண்ணன் நாசரிடம் கூறுவார்.
இப்படி பல படங்களில் குறிப்பிட்ட கேரக்டர்களில் வந்த நடிகர்கள், அதற்கு பின் வந்த படங்களில் ஒரு சில காட்சிகளில் அதே கேரக்டரில் வருவது வழக்கமான ஒன்றாக தான் இருந்திருக்கிறது. குறிப்பாக அயன் படத்தில் கூட நடிகர் சூர்யா, ஒரு பாடல் காட்சியில் விமான நிலையத்தில் பேரழகன் வாரணம் ஆயிரம் காக்க காக்க சிங்கம் போன்ற படங்களில் நடித்த கெட்டப்புகளில் வருவது போல காட்டப்படும்.
இதே பார்மூலாவை தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் இயக்கும் படங்களில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் – எல்சியு என்கிற பெயரில் கொண்டு வருகிறார். இது என்னவோ பெரிய அதிசயம் போல இன்றைய இளம் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். உண்மையில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்த ஒரு பழைய விஷயம்தான் இது. இப்போது எல்சியு என்று அதை புதிய பெயர் வைத்து சொல்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் எல்சியு போல, அவரும் எஸ்சியு அதாவது ஷங்கர் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கொண்டு வர திட்டமிட்டதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, இந்தியன் தாத்தா சிவாஜி முதல்வன் படம் புகழேந்தி இந்த 3 பேரும் சேர்ந்து ஒரு படத்தில் ஒரு சண்டைக்காட்சி ஒரு படத்தில் வைக்கலாம் என்று உதவி இயக்குனர்களிடம் ஒருமுறை சொன்னேன்.
அவங்க எல்லாம் என்னை மேலேயும் கீழேயும் பார்த்தாங்க, என்னாச்சு இவருக்கு அப்படீன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டு போயிட்டாங்க. அப்புறம் நம்ம சீஃப் டெக்னிஷியன்ஸ் கிட்ட சொல்லிப் பார்த்தேன். அவங்களும் சும்மா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு நகர்ந்து போயிட்டாங்க. ஹ… சூப்பர் என்று ஒருத்தராச்சும் ஆச்சரியப்பட்டு சொல்லி இருந்தால் எனக்கு மேற்கொண்டு ஏதாவது பண்ணலாம் என்று தோன்றியிருக்கும்.
அப்புறம் ரெண்டு மூன்று வருஷங்கள் கழிச்சு பார்த்தால் பர்ஸ்ட் ரிவென்சர்ஸ் படம் வந்ததுன்னு நெனைக்கிறேன். அப்போதான் எனக்கு தோணிச்சு. ச்சே நாம அதை கண்டிப்பா பண்ணியிருக்கணும் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். அப்படி அவர் இந்தியன் சிவாஜி முதல்வன் புகழேந்தி ஆகியோரை ஒரே படத்தில் கொண்டு வந்திருந்தால் அது வேற லெவல் படமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.





