தமிழ் சினிமாவில் முன்ணனி இயக்குனராக உள்ளவர் ஷங்கர். 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருடன் வலம் வரும் ஷங்கர் இதுவரை 15 படங்களை இயக்கி உள்ளார். இதில் தெலுங்கு இந்தி படங்களும் உண்டு. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதை திக் திக் தீபிகா என்ற பெயரில் கடந்த 2007ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படமும் வெளியானது. அந்த படத்தை பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், எந்திரன் படத்தின் கதை தன்னுடைய ஜூகிபா கதை எனக்கூறி எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
தொடர்ந்து தனது கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவும் கூறி எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராய் நடித்த எந்திரன் படம் உலகம் முழுவதும் 290 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்துக்காக இயக்குனர் ஷங்கர் 11.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை அமைப்பு கதாபாத்திரம் கருப்பொருள் கூறுகளை பிலிம் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆய்வு செய்தது. ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்தின் கதைக்கும் உள்ள ஒற்றுமையை அறிக்கையாக சமர்ப்பித்தது, அந்த அறிக்கையின் அடிப்படையில் இயக்குனர் ஷங்கர் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளது. அந்த வகையில் காப்புரிமை சட்டத்தை இயக்குனர் ஷங்கர் மீறியுள்ளார்.
இது சட்டவிராத பண பரிமாற்றம் 2022 சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோத பண பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் இயக்குனர் ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூபாய் 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடைசியில் ஷங்கரும் கதை திருட்டில் சிக்கி விட்டாரே என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.





