இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் சுதா கொங்கரா. இவர் துரோகி, இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
இந்த நிலையில் தனது நான்காவது திரைப்படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணைந்தார் சுதா. இதற்குப் புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டது. தன்னெழுச்சியான போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இதனை சூர்யாவின், 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா மற்றும் நஸ்ரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதன் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் திருச்சி, சிதம்பரம் பகுதிகளில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் திடீரென படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. என்ன காரணம் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவே இல்லை. சூர்யாவும் இதை எதையும் கண்டுகொள்ளாமல் கார்த்திக் சுப்புராஜுடன் கரம் கோர்த்தார். இது அவரின் 44-வது திரைப்படமாக எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கான வேலைகளில் தற்போது சூர்யா முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்தமான் பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், அடுத்த வேலைகளுக்காக படக்குழு சென்னை சென்றிருக்கிறது. இதனிடையே, புறநானூறு திரைப்படம் குறித்த சில தகவல்களை சுதா பேசியிருக்கிறார்.
பல்வேறு காரணங்களால் புறநானூறு திரைப்படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாகவும், நிச்சயமாக ஒரு நாள் அதனை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இறுதிச்சுற்று திரைப்படத்தை விட 100 மடங்கு, சூரரைப் போற்றும் படத்தை விட 50 மடங்கு நெருக்கமான கதை இது என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் புறநானூறு திரைப்படத்தை தான் தனது 25வது திரைப்படமாக சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக அவர் சிபி சக்கரவர்த்தியுடன் இணையும் சூழலில், 25வது படத்திற்காக சுதாவுடன் அவர் இணைந்து பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.





