தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். 4 ஆண்டுகளில் அவர்களது காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.
அதன்பிறகு மயோசிடிஸ் எனும் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். தொடர்ந்து பலவிதமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில் அவர் குணமடைந்தார். இப்போது மீண்டும் நடிகை சமந்தா நடிப்பில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் சமந்தா தொடர்ந்து முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மட்டுமின்றி இப்போது இந்தியிலும் அவர் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வந்த சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெப் சிரிஸில் நடிக்க நடிகை சமந்தா கமிட்டாகி இருக்கிறார்.
இதற்கிடையே இயக்குனர் அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராம் சரண் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சமந்தா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இதுகுறித்த முறையான அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அந்த விழாவில் கலந்துக்கொண்ட இறுதிச் சுற்று சூரரைப் போற்று மற்றும் பராசக்தி படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா நடிகை சமந்தா குறித்து மேடையில் பேசியதாவது, நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் டச்சில் இருக்கிறேன். அவர் அழுதால் நானும் அழுவேன்.
சமந்தா எதிர்த்து போராடும் விதமும் அவரது குணமும் எனக்கு பலம் தருகிறது. அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். எனக்கு சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் ரொம்பவும் பிடிக்கும் என்று பேசியிருக்கிறார் அப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சமந்தா எப்போது நடிக்க போகிறார் என்று தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார். அதற்கு இயக்குனர் சுதா கொங்கரா, கண்டிப்பாக நான் சமந்தாவுடன் இணைந்து படம் பண்ணுவேன் என பதில் அளித்தார். அப்போது அருகில் இருந்த சமந்தா, எனக்கு ஆக்சன் படம் பண்ண வேண்டும் என்றும் கூறினார்.





