தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. காமெடி காதல் திகில் படங்களை எடுப்பதில் வல்லவர் என தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவர் என்ற அடையாளமும் இவருக்கு உண்டு.
கடந்த ஆண்டில் அரண்மனை 4 மற்றும் இந்த ஆண்டில் மதகஜ ராஜா என்ற 2 சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் சுந்தர் சி. இனி அடுத்ததாக அவரது இயக்கத்தில் கேங்கர்ஸ் படம் வருகிற 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் வடிவேலு 5 கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். மேலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில் 8ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சங்கமித்ரா என்ற ஒரு சரித்திர கதையை படமாக்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சுந்தர் சி அறிவித்தார். இந்த படத்தில் நடிகர்கள் ரவி மோகன் ஆர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சங்கமித்ரா படத்தின் போஸ்டர்கள் 2017ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பாகுபலி, பொன்னியின் செல்வன், கேஜிஎப் போன்ற படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் சில பிரச்னைகளால் இன்னும் சங்கமித்ரா படப்பிடிப்பு தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எப்போது இந்த படம் ஷூட்டிங் துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில் இயக்குனர் சுந்தர் சி சங்கமித்ரா படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை ரசிகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளது. இந்த படத்தை எடுத்து முடிக்க 2 முதல் 3ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் என்னுடைய இப்போதைய கமிட்மெண்டுகளை முடித்த பின்தான் அதை தொடங்க முடிவு செய்திருக்கிறேன் என்று சுந்தர் சி கூறியிருக்கிறார். மேலும் சங்கமித்ரா படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





