தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் புது வசந்தம். அதன்பிறகு பூவே உனக்காக சூரியவம்சம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் வானத்தைப் போல உன்னை நினைத்து என பல வெற்றிப் படங்களை அவர் தந்திருக்கிறார்.
இப்போது இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்காவும் நடிக்க வந்துவிட்டார். ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனின் அம்மாவாக நடித்த நடிகை சித்தாரா தான், இயக்குனர் விக்ரமன் இயக்கிய முதல் படம் புதுவசந்தம் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990ம் ஆண்டில் வெளியான புது வசந்தம் படம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாகும். இதில் முரளி ராஜா ஆனந்தபாபு சார்லி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். எஸ்ஏ ராஜ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகின. விக்ரமனுக்கு இந்த படம் பெரிய வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, புது வசந்தம் படத்துல முதலில் எனக்கு நாயகியாக மைண்ட்ல இருந்தது நடிகை ரேவதிதான். ரேவதிக்கு நான் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுல போய் கதை சொன்னேன். கதை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் நாளைக்கு சொல்றேன்னு சொன்னாங்க.
அடுத்த நாள் நான் போன் பண்ணி கேட்கறேன், இல்லீங்க நான் உங்க அடுத்த படத்துல நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு என்ன டவுட்டுன்னே எனக்கு தெரியலே. என் மேல டவுட்டா, இல்லே புரடியூசர் மேல டவுட்டான்னு தெரியலை. ஏன்னா அப்பதான் அவர் முதல் படமா புதுவசந்தம் தயாரிக்கிறார். சினிமா துறைக்கும் அவர் புதுசு.
இந்த பேனர் குறித்து யாருக்கும் நம்பிக்கை இல்லே. ரேவதி என்ன நெனைச்சாங்கன்னே தெரியலை. இந்த படம் வேணாம், அடுத்த படத்துல நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் வேற வழியில்லே. வேற நடிகையை தான் தேடனும்ங்கற நிலைமை வந்தப்போ தான் சித்தாரா அதுல நடிச்சாங்க என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





