மில்லியன் டாலர் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தை தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் லவ்வர் குட் நைட் ஆகிய படங்களை தயாரித்திருக்கிறது. அபிஷன் ஜீவிதன் என்ற புதுமுக இயக்குனர் டூரிஸ்ட் பேமிலி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக சசிகுமார் நாயகியாக சிம்ரன் மற்றும் யோகி பாபு எம் எஸ் பாஸ்கர் பசுபதி பெருமாள் ரமேஷ் திலக் உள்ளிட்ட பாலர் நடித்திருக்கின்றனர்.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் அறிமுக விழாவில் நடிகர் சசிக்குமார் பேசியதாவது, ஒரு படம் நன்றாக வரும் என்கிற 100 சதவீத நம்பிக்கையுடன் தான் படத்தை எடுக்கிறோம். ஆனால் அதே நம்பிக்கை ஊக்கம் ரசிகர்களிடமிருந்து வரும்போதுதான் அது நிறைவாகிறது. தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல தான் இந்த படத்தின் ரிசல்ட்டுக்காக மே 1ம் தேதி வரை நாங்கள் காத்திருப்போம்.
இந்த படத்தின் இயக்குனருக்கு 24 வயதுதான் ஆகிறது. அதனால் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நான் வயது முக்கியமில்லை கதை மட்டுமே முக்கியம் என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடித்த எந்த ஹீரோவும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எங்கு சென்றாலும் இந்த கதை என்னிடம் தான் வரும் என்று நம்பினேன். அப்படியே இந்த கதை எனக்கு தான் வந்தது.
எனக்கு ஜோடியாக இந்த படத்தில் சிம்ரன் நடிக்கிறார் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்ரன் எப்படீங்க உங்க கூட நடிக்க சம்பாதிச்சாங்க என்றும் கேட்கிறார்கள். ஏன் நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா? அந்த தகுதி எனக்கு இல்லையா? என்னை போலவே அவரும் கதையை நம்பித்தான் படத்திற்கு வந்தார். அவர் இப்போதும் ஹீரோயின்தான். இந்த படத்திலும் நான் ஹீரோ. அவர் ஹீரோயின்.
படத்தின் ஸ்கிரிப்ட் என்னவோ அதை அப்படியே படமாக இயக்குனர் எடுத்திருக்கிறார். இதுவே படத்தின் முதல் வெற்றி. இது இலங்கைத் தமிழர்கள் இந்தியா வந்து செட்டிலாகும் வேதனைகளை காமெடியான படமாக சொல்லி இருக்கிறோம். படம் காமெடியாக இருந்தாலும் அவர்களின் வேதனை அதற்குள்ளாக இருக்கும். இந்த உலகம் முழுக்க உள்ள நாடு இழந்த மக்களுக்கு இது பொருந்துகின்ற கதையாக இருக்கும்.
நாம் இப்போது தமிழை மறந்து ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால் தமிழ் மொழி கலாச்சாரம் இவற்றை எப்போதும் விட்டுவிடக்கூடாது. தமிழ் மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது இந்த படம். இந்த படத்தை பார்த்துவிட்டு 10 பேராவது தமிழ் கற்க முன் வந்தால் அதுவே இந்த படத்தின் வெற்றிதான். கமல்ஹாசன் நடித்த தெனாலி படத்தின் இன்ஸ்பிரேஷனில் தான் இந்த படம் உருவாகி உள்ளது என்று அந்த விழாவில் நடிகர் சசிகுமார் பேசியிருக்கிறார்.





