ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றால், காட்டு மொக்கை படமாக இருந்து விட்டால் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக கடும் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் உருவான ஒரு படத்தை இப்படி விமர்சிப்பது சரியல்ல என்று திரையுலகம் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அப்படி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் ஒரு படத்தை உருவாக்கும் போது சிறந்த கதை திரைக்கதை இயக்கம் என்று இல்லாமல், ஒரு இயக்குனர் பொறுப்பின்றி செயல்பட்டு மொக்கை படமாக தருவதை பற்றி திரையுலகம் சார்ந்தவர்கள் யோசிப்பதே இல்லை. அதே போல் ஒரு ரசிகர்கள் கொடுக்கும் 200 ரூபாய் டிக்கெட் கட்டணமும் அவரது கடும் உழைப்பில் வந்தது என்பதையும் சுலபமாக மறந்து விடுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மொக்கை படங்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்கள் 241. இதில் 8 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன. இதில் காட்டு மொக்கை என விமர்சிக்கப்பட்ட இந்தியன் 2 மற்றும் கங்குவா என்ற 2 படங்களும் உள்ளது. இதுதான் தமிழ் சினிமாவின் அவல நிலையாக உள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை 7.5 மாதங்களில், அதாவது ஆகஸ்ட் 15 வரை 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை 10 கூட தாண்டாது. குறிப்பாக விடாமுயற்சி கூலி குபேரா தக்லைஃப் கேம் சேஞ்சர் என பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மணிரத்னம் ஷங்கர் லோகேஷ் கனகராஜ் மகிழ் திருமேனி என ஸ்டார் இயக்குனர்களே பிளாப் படங்களை தந்திருக்கின்றனர்.
அதே போல் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜீத்குமார் தனுஷ் என நட்சத்திர ஹீரோக்களின் படங்களே மண்ணை கவ்வியிருக்கின்றன. அதே நேரத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் ஜெயித்திருக்கின்றன. இங்கே கதை திரைக்கதை இருந்தால் படம் ஜெயிக்கும்.
அதுதான் ரசிகர்களின் வரவேற்பை பெறும் தாரக மந்திரம்.
அதை விட்டுவிட்டு ஜாம்பவான் இயக்குனர், நட்சத்திர நடிகர் நடித்தால் படம் ஓடும் என்றால் அது நடக்காது. கதை திரைக்கதை சொதப்பினால் படம் யார் படமாக இருந்தாலும் அது தோற்கும். இதற்கு கூலி, தக்லைஃப் படங்களை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. எந்திரிக்கவே முடியாத அளவுக்கு தொடர்ந்து பலத்த அடி விழும் நிலையில், இனியாவது ஜாம்பவான் இயக்குனர்கள் நட்சத்திர நடிகர்கள் நல்ல படம் தர முன்வர வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.





