திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். காதலும் கவிதையும் கண்ணீரும் வீரமும் சமூக உணர்வுகளும் நிறைந்த படங்கள் மட்டுமின்றி காமெடியை மட்டுமே கதையாக கொண்டு ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. இப்போதும் காதலிக்க நேரமில்லை படத்தையும் காசேதான் கடவுளடா படத்தையும் காட்சிக்கு காட்சி ரசிக்க முடிகிறது.
ஆண்பாவம் பாட்டி சொல்லை தட்டாதே நெத்தியடி முதல் மரியாதை எங்க சின்ன ராசா தாவணிக்கனவுகள் முந்தானை முடிச்சு விரலுக்கேத்த வீக்கம் பொங்கலோ பொங்கல் காலம் மாறிப்போச்சு கரகாட்டக்காரன் போன்ற படங்கள் பார்ப்பதற்கு சலிப்பதே இல்லை. மணிரத்னம் பாலு மகேந்திரா கே பாலசந்தர் பாரதிராஜா கே பாக்யராஜ் சேரன் கரு பழனியப்பன் என பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவை நல்ல தளமாக வைத்திருந்தனர்.
நெல்சன் திலீப்குமார் லோகேஷ் கனகராஜ் செல்வராகவன் அமீர் அருண் மாதேஸ்வரன் வெற்றிமாறன் எச் வினோத் சசிக்குமார் போன்றவர்களின் வருகைக்கு பிறகு தமிழ் சினிமா அதன் தரத்தையே இழக்க துவங்கி விட்டது. உதாரணமாக பருத்தி விரன் ஜெயிலர் டாக்டர் விடுதலை வடசென்னை புதுப்பேட்டை சுப்ரமணியபுரம் கேப்டன் மில்லர் லியோ கூலி ராயன் கைதி விக்ரம் போன்ற படங்களில் முழுக்க முழுக்க இரத்தம்தான்.
இது தமிழ் படங்களில் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் தொடர்கிறது. யதார்த்தமான கதைகளை படமாக்கிய மலையாள சினிமாவிலும் இப்போது இரத்தம் தெறிக்கும் வன்முறை படங்கள் வரத் துவங்கி விட்டன. அவர்களும் துப்பாக்கி கத்தி வெடிகுண்டு என இறங்கி விட்டனர். கன்னடம் தெலுங்கு படங்கள் ஆரம்பம் முதலே வன்முறை நிறைந்த படங்கள்தான்.
ஒரு படம் பார்க்க தியேட்டருக்குள் சென்று விட்டு திரும்பினால், நம் முகத்தில் இரத்தம் எதுவும் தெறித்திருக்கிறதா என அஞ்சும் அளவுக்கு இயக்குனர்கள் வன்முறை படங்களாக எடுத்து தள்ளி, தங்களது வீரத்தை திரையில் காட்டுகின்றனர். நேர்காணல்களில் புத்தர் போல வாழ்க்கை தத்துவம் பேசும் இயக்குனர் எச் வினோத் கூட தனது ஜனநாயகன் படத்தில் வன்முறையை தான் காட்டியிருக்கிறார்.
டாக்ஸிக் போன்ற படங்களை பார்க்கும் போது இனி வன்முறை படங்களில் பிட்டு காட்சிகளும் அதிகரித்து விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் பெண் இயக்குனர் இயக்கிய படம் இந்த அவலத்தில் உள்ளது. தமிழ் சினிமாவை இன்றைய இந்த இயக்குனர்கள் அழிக்க வந்திருக்கின்றனர். இவர்களின் படங்களை புறக்கணிக்க ரசிகர்கள் முடிவு செய்தால் மட்டுமே தமிழ் சினிமாவை இந்த வன்முறை இயக்குனர்களிடம் இருந்து காப்பாற்ற முடியும். இல்லை எனில் நடிகர்கள் கையில் சிக்கி நாடு அழிவது போல், சினிமாவும் அழிந்து போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.





