நடிகை ஆச்சி மனோரமா வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நாசர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு தமிழ் திரைக்கலைஞர்களுக்கு வழங்கி வரும் அன்பும் மரியாதையும் அவர்கள் உழைப்புக்கும் திறமைக்கும் அழியாப் பெருமையும் புகழையும் சேர்த்து வருகிறது.
அந்த வகையில் மறைந்த நடிகர்கள் ஜெய்சங்கர் விவேக் எஸ்வி வெங்கடராமன் பெயர்களை கொண்டு சென்னையின் தெருக்களுக்கு பெயர் சூட்டி அலங்கரித்ததை மிகவும் நன்றியோடு நினைவு கூறுகிறோம். மேலும் நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பெயரை சூட்டியதும் சென்னை மையத்தில் அமைந்த ஒரு போக்குவரத்து தீவுக்கு இயக்குனர் கே பாலசந்தர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது கலைஞர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட உலகின் பொக்கிஷமாக கருதப்படும் மறைந்த பத்மஸ்ரீ கலைமாமணி மனோரமா வாழ்ந்த தியாகராய நகர் நீலகண்ட மேத்தா தெருவுக்கு அவரது பெயரை சூட்டி கவுரவிக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பணிவான கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம் என்று அந்த மனுவில் நடிகர் நாசர் கூறியிருக்கிறார்.
தமிழக அரசுக்கு, நடிகர் நாசர் எழுதிய மற்றொரு கடிதத்தில் கூறியிருப்பதாவது, மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக நிறுவப்பட்டுள்ள நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்கள் திருவுருவச் சிலையை அங்கு நடந்து வரும் மேம்பால பணிகளால் இடமாற்றம் செய்ய மதுரை நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிறைய கலையுலக வித்தகர்களின் வாழ்வுக்கும் புகழுக்கும் அஸ்திவாரமாக விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களது சிலையை தமுக்கம் மைதானப் பகுதியில் இருந்து அகற்றாமல் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு அருகிலோ, தமுக்கம் மைதானத்தின் வேறு உள்ளே வேறு ஒரு பொருத்தமான இடத்திலோ அமைத்து தர அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் புகழுக்கு பெருமை சேர்க்குமாறு நடிகர் சங்கம் சார்பாக இந்த கோரிக்கைகளை பரிசீலனைக்கு சமர்ப்பிக்கிறோம் என்று அதில் நடிகர் நாசர் கூறியிருக்கிறார். நடிகை மனோரமா திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களில் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





