தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். கங்கோத்ரி என்னும் திரைப்படம் மூலம் 2003 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான அவர், இன்று பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஆர்யா 2, வேதம், ஜுலாயி, சன் ஆப் சத்தியமூர்த்தி, அல வைகுண்டபுரமலு என அல்லு அர்ஜுனின் வெற்றி திரைப்படங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் நடிகரின் திரை உலக பயணத்திலேயே ஒரு மாணிக்க மகுடமாக அமைந்தது புஷ்பா திரைப்படம். சுகுமார் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகதீஷ் பிரதாப், சுனில் என ஏராளமானோர் நடித்திருந்தனர். ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைப்பகுதிகளில் செம்மரங்கள் கடத்தப்படுவதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பாணிதியார் திரைப்படமாக தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் புஷ்பா திரைப்படம் வெளியானது. 170 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.
படத்தில் புஷ்பராஜ் எனும் கதாபாத்திரத்தில் வரும் அல்லு அர்ஜுன், மிக இயல்பாக நடித்திருந்தார். ஒரு தோள்பட்டையை இறக்கியவாறு அவர் நடந்து செல்லும் ஸ்டைலே பலருக்கும் இங்கு பிடித்துப் போனது. குறிப்பாக ஸ்ரீவள்ளி பாடலுக்கு அவர் நடனமாடும் தோரணையை பலரும் பின்பற்றி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டனர். இது ஒரு பக்கம் இருக்க புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
அந்தப் பாடலுக்கு நடனம் ஆடி இருந்த சமந்தா, கவர்ச்சிக்கு தாராளம் காட்டி இருந்தார். பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகளும் இசையும் பலருக்கும் பிடித்திருந்ததால், அந்த சமயத்தில் புஷ்பா பட பாடல் வைரல் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தட்டிச் சென்றார்.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன. இதிலும் குத்து பாடல் ஒன்றை வைப்பதற்கு இயக்குனர் சுகுமார் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தில் இடம் பெற்ற சமந்தா இதில் வரவில்லையாம். அதற்கு பதில் முன்னணி நடிகைகளான திஷா பதாணி மற்றும் க்ரித்தீஷனோன் ஆகியோர் நடனம் ஆடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.





