கடந்த ஆறு மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்த ஜனநாயகன் படம் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் இந்த படம் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடியும் உலக அளவில் ரூ. 150 கோடி வசூலையும் ஈட்ட வேண்டும் என்று படக்குழு தரப்பில் ஒரு கணக்கு போடப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஜனநாயகன் படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளது. உலக அளவில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஏற்கனவே இணையத்தில் படம் வெளியாகி விட்டது. அதை பார்த்தவர்கள் அதிக விலை கொடுத்து தியேட்டரில் படம் பார்க்க தயாராக இல்லை. மேலும் தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படவும் இல்லை.
மேலும் வியாழக்கிழமை என்பதால் அதிக கூட்டமும் வரவில்லை. இதை எல்லாவற்றையும் விட 16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் இது ஏ படம். இதனால் மற்ற மாநிலங்கள் வெளிநாடுகளிலும் முதல் நாளில் அதிக கூட்டம் வரவில்லை. இந்த காரணல்களால் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் வசூலை கூட ஜனநாயகன் படம் தொடவில்லை.
இதற்கு முன்பு பீஸ்ட் ரூ. 35 கோடி லியோ ரூ. 34 கோடி குட் பேட் அக்லி ரூ. 31 கோடி தி கோட் ரூ. 30.8 கோடி கூலி ரூ. 30 கோடி சர்க்கார் ரூ. 29 கோடி வலிமை ரூ. 28 கோடி விடாமுயற்சி ரூ. 27 கோடி ஜெயிலர் ரூ. 27 கோடி மாஸ்டர் ரூ. 26 கோடி என முதல்நாளில் வசூலில் இருந்தது. அந்த சாதனையை ஜனநாயகன் படம் முறியடிக்க வில்லை.
மேலும் வெள்ளி சனி ஞாயிறு டிக்கெட் புக்கிங் ஓரளவு மட்டுமே உள்ளது. ஆனால் திங்கட்கிழமைக்கு பிறகு இந்த கூட்டம் இருக்குமா என்பதும் சந்தேகம்தான். படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. தவிர ஏ படம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பமாக சென்று பார்க்க முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளது. அதனால் அடுத்த வாரத்தில் ஜனநாயகன் படத்தின் வசூல் கணிசமாக குறையவும் வாய்ப்பு உள்ளது.
விஜய் ரசிகர்கள் தவெக தொண்டர்கள் மட்டுமே ஜனநாயகன் படத்தை ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். அதனால் ஜனநாயகன் பெரிய வெற்றியை பெற வாய்ப்பு இல்லை. ஒருவேளை விஜய் தரப்பு வேறு திட்டம் ஏதும் போட்டால் இன்னும் சில நாட்களுக்கு தியேட்டரில் மக்கள் கூட்டம் இருக்கலாம். ஆனால் எப்படி இருந்தாலும் படத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் அதிகரித்தால் மட்டுமே ஒரு படம் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும்.





