தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். பாரதி கண்ணம்மா பொற்காலம் தேசிய கீதம் வெற்றிக்கொடி கட்டு தவமாய் தவமிருந்து ஆட்டோகிராஃப் பாண்டவர் பூமி என சேரன் இயக்கிய படங்கள் எல்லாமே பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. நல்ல படைப்பாளியாக தன் திறமையை நிரூபித்தவர்.
மேலும் ஆட்டோகிராஃப் சொல்ல மறந்த கதை தவமாய் தவமிருந்து ராமன் தேடிய சீதை பிரிவோம் சந்திப்போம் திருமணம் என பல படங்களில் அவர் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் சேரன் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சமீபத்தில் ஜர்னி என்ற வெப் சீரிஸ் ஒன்றையும் சேரன் டைரக்ட் செய்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் சேரன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு கதையை படமாக இயக்குகிறார். இந்த படத்தை தமிழ் குமரன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக, நெடுஞ்சாலை நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்த ஆரி நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
டாக்டர் ராமதாஸை மருத்துவர் அய்யா என்றுதான் பாமக தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அதனால் இந்த படத்துக்கு அய்யா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் தமிழ் குமரன் ஆகியோர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் வெளியிட்டனர்.
அப்போது இதுகுறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது, அய்யா திரைப்படத்தின் போஸ்டர் டிசைன்களை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்போதுதான் இதன் வேலைகள் ஆரம்பிக்கிறது. ஆகையால் மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்து வைக்கும் நண்பர்கள் திரைப்படம் வரும் வரை பொறுமை காத்து அதன் பின்னர் கருத்துக்களை சொல்லவும் நன்றி என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.
வழக்கமாக அரசியல் தலைவர்களின் பயோபிக் என்றாலே பலவிதமான எதிர் கருத்துகளும் மாற்று கருத்துகளும் வருவது சகஜம்தான். பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பயோபிக் படங்கள் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரின் புகழ் பாடும் படமாகவே இருக்கும். அதனால் இந்த படத்துக்கும் விமர்சனங்கள் வரும் என்பதால், இப்பவே சண்டைக்கு வராதீங்க, படம் வெளியான பிறகு வாங்க என்று இயக்குனர் சேரன் சூசகமாக கூறியிருக்கிறார்.





