குறும்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை டைரக்ட் செய்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அவரே கதாநாயகனாக நடித்து இயக்கிய படம்தான் லவ் டுடே. சத்யராஜ் ராதிகா சரத்குமார் இவானா யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் அனுபமா பரமேஸ்வரன் மிஷ்கின் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிராகன். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. கல்லூரி காதல் கதை என்ற களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதை டிரெய்லர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் டிராகன் படத்தின் டிரெய்லர் பார்த்தவர்கள் பலரும், இது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் என்ற படத்தின் காப்பி தான் என்று விமர்சிக்க துவங்கி விட்டனர். இதே போன்ற ஒரு கேரக்டரில்தான் டான் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள பல காட்சிகள் டான் படத்தையே நினைவுபடுத்துகிறது.
டான் படத்தில் கண்டிப்பான ஒரு பேராசிரியர் கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்திருப்பார். அதுபோன்ற ஒரு கேரக்டரில்தான் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கினும் நடித்திருக்கிறார். டான் படத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் எஸ்கே ஆசைப்படுவது போலவே இந்த படத்திலும் பிரதீப் ஆசைப்படுகிறார். ஆக மொத்தத்தில் டான் பட வாடை டிராகன் படத்தில் அதிகமாக வீசுகிறது என்ற விமர்சனம் பலமாக எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் எப்படி நடித்தாரோ அதே போன்ற ஒரு நடிப்பை தான் தனது படங்களில் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனும் நடித்து வருகிறார். லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படத்திலும் பல காட்சிகளில் தனுஷ் நடிப்பும் உடல் மொழியும் அப்படியே பிரதீப் ரங்கநாதனிடம் காணப்படுகிறது. இதனால்தான் பலரும் இவரை சின்ன தனுஷ் என்றே சொல்கின்றனர் என்றும் கமெண்ட் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வழக்கமாக மலையாளம் இந்தி தெலுங்கு படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் இருந்துதான் கதைகளை சுட்டு எடுப்பார்கள். ஆனால் இந்த முறை அதிக ரிஸ்க் எடுக்காமல் சில ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தையே பட்டி டிங்கரிங் பார்த்து டிராகன் படமாக தர உள்ளனர். தமிழ் சினிமாவில் கதையை ஜெராக்ஸ் எடுப்பதை விடவே மாட்டார்களா என ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.





