பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. தொடர்ந்து திரௌபதி பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் தற்போது திரௌபதி 2 என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். 14ம் நூற்றாண்டு ராஜா காலத்து கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. ரிச்சர்ட் ரிஷி ரக்சனா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் கடந்த 23ம் தேதி வெளியானது.
முதலில் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு தான் கடந்த 15ம் தேதி வெளியாவதாக இருந்தது. அப்போது வா வாத்தியார் தலைவர் தம்பி தலைமையில் படங்கள் வௌியானதாலும் ஏற்கனவே பராசக்தி படம் 10ம் தேதி வெளியான நிலையிலும் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் இந்த படத்தை 23ம் தேதிக்கு இயக்குனர் மோகன்ஜி தள்ளி வைத்தார்.
அதே நேரத்தில் நடிகர் விஜய் நடித்த தெறி படமும் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படமும் 23ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் தாணுவிடம் இயக்குனர் மோகன்ஜி கேட்டுக்கொண்டதால் தெறி படத்தை தேதி குறிப்பிடாமல் தயாரிப்பாளர் தாணு தள்ளி வைத்துவிட்டார். ஆனால் குறிப்பிட்ட தேதி திரௌபதி 2 படம் வெளியான நிலையில் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படமும் ரி ரிலீஸ் ஆகி விட்டது.
நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான திரௌபதி 2 படத்தை ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் அந்த படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டு ஆதங்கமாக பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, திரெளபதி 2 திரைப்படத்துக்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும் மங்காத்தா திரைப்படம் வெளியீட்டால் அதற்கு முன்பு இந் படம் நிற்க முடியவில்லை. பொங்கல் அன்று திரையரங்கம் பற்றாக்குறையால் வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறாகி விட்டது. மக்களிடம் திரௌபதி 2 ஜனவரி 23ம் தேதி வெளியாகிறது என்ற தகவலை கொண்டு சேர்க்க முடியவில்லை.
மங்காத்தா திரைப்பட கூட்டத்தால் எங்கள் படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும் படம் பார்க்காமல் தவறான கருத்துகளையும் பரப்பி வருகிறார்கள். திரைப்படத் துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 ஆண்டுகளை கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனக்கு மக்களே துணை. மக்களே முடிவு செய்யட்டும் என்று அந்த வீடியோவில் இயக்குனர் மோகன்ஜி பேசியிருக்கிறார்.





