- Advertisement -
Homeபொழுதுபோக்குபாரதிராஜா பட நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை- சட்ட விரோதமாக பண பரிமாற்றம்...

பாரதிராஜா பட நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை- சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததா?

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டில் வெளியான படம் கல்லுக்குள் ஈரம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அருணா. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா கேரக்டரில் பாரதிராஜாவே நடித்திருந்தார். மேலும் சுதாகர் கவுண்டமணி விஜயசாந்தி ஜனகராஜ் மனோபாலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம்தான் அருணா மற்றும் விஜயசாந்தி இருவரும் அறிமுகமான முதல் படம். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

தொடர்ந்து சிவப்பு மல்லி டார்லிங் டார்லிங் டார்லிங் முதல் மரியாதை நாடோடி ராஜா கருமேடு கருவாயன் பெண்மணி அவள் கண்மணி சகலகலா சம்பந்தி இதயத்தை திருடாதே ஆடி வெள்ளி எங்க அண்ணன் வரட்டும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிகை அருணா நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழி படங்களிலும் அருணா நடித்திருக்கிறார்.

நடிகை அருணாவின் கணவர் பெயர் மோகன் குப்தா. இவர் பிரபல தொழிலதிபராக இருந்து வருகிறார். வீடுகள் நிறுவனங்களில் உள்கட்டமைப்புகளுக்கான அலங்கார பணிகளை செய்யும் நிறுவனத்தை மோகன் குப்தா நடத்தி வருகிறார். சென்னை நீலாங்கரையில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நடிகை அருணா வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அருணாவின் கணவர் மோகன் குப்தா நடத்திவரும் நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மோகன் குப்தாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மோகன் குப்தா மற்றும் அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைகள் நிறைவடைந்த பின்னர், இந்த ரெய்டில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததா உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்போது நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்