தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 1990களில் இருந்தவர் நடிகை கஸ்தூரி. அமைதிப்படை, ராக்காயி கோயில், சின்னவர், இந்தியன், எங்க முதலாளி, செந்தமிழ்பாட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கஸ்தூரியின் சில பதிவுகள் வைரலாகி வருகின்றன. பல சர்ச்சையான கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு விமர்சனத்தில் அவர் சிக்கிக் கொள்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள். அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று வைக்க முடியவில்லை என்று ஆவேசமாக பேசினார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்தார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாகவும் சொல்லவில்லை. தெலுங்கு மக்கள் பற்றி தவறாகவும் பேசவில்லை.
திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களைச் சொன்னதாக திசையை திருப்பி விட்டவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். எந்த மொழி பேசினாலும் தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2 நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன. நான் எப்போதும் சாதி, பிரதேசம் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை. கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன்.
தெலுங்கு திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர் புகழ் அன்பு நல்ல குடும்பத்தை வழங்கியுள்ளனர். நான் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறிப்பிட்ட சில நபர்களுக்குத்தானே தவிர பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள், தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த் என்று அதில் கஸ்தூரி கூறியிருக்கிறார்.





