தமிழ் சினிமாவை பிரிக்க வேண்டும் என்றால் அது பா ரஞ்சித் வருகைக்கு முன் பா ரஞ்சித் வருகைக்குப் பின் என தைரியமாக கூறலாம். பல ஆண்டுகளாகவே தலித் சினிமா தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தாலும் அதை அத்தனையும் ஓரம் கட்டி விட்டு அவர்கள் வாழ்வியலையும் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் மிகச் சரியாக திரைமொழியில் கொண்டு வந்தவர் பா ரஞ்சித்.
அட்டகத்தி படத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம் மெட்ராஸ், கபாலி, காலா என ஏறுமுகத்தில் சென்றது. மெட்ராஸ் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பை கிடைத்தாலும், தான் சொல்ல வந்த கருத்தை எந்த ஒரு சமரசம் இல்லாமலும் கூறி ஆச்சரியப்பட வைத்தார் ரஞ்சித்.
ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய பிறகு அவர், சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது தான் அதன்குறை. இதன் பிறகு நட்சத்திரங்கள் நகருகிறது மற்றும் தங்கலான் திரைப்படத்தை பா ரஞ்சித் எடுத்திருந்தார். இதில், தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் டீசரும் படத்திற்கான பிரம்மாண்டத்தை கூறும் வகையிலேயே அமைந்தன.
ஆனால் விமர்சன ரீதியாக தங்கலான் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இந்த நிலையில் தான் தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கான வேலையில் இறங்கி இருக்கிறார் பா ரஞ்சித். இந்த முறை தனது திரைப்படத்திற்கு அவர் வேட்டுவம் என தலைப்பு வைத்திருக்கிறார்.
இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் ரஞ்சித். மிக முக்கியமாக இதில் மலையாள நடிகர் பகத் பாஸில் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கேங்ஸ்டர் கதையாக இது உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





