- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு வில்லனாகும் ஃபகத் பாசில்?.. அடுத்த சம்பவம் காத்திருக்கோ?.. ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினிக்கு வில்லனாகும் ஃபகத் பாசில்?.. அடுத்த சம்பவம் காத்திருக்கோ?.. ரசிகர்கள் மகிழ்ச்சி

- Advertisement -

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விகளுக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து தனது மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் லால் சலாம் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அவரது 170ஆவது திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது.

அதற்கு காரணம் அந்தப் படத்தை இயக்குவது ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல். அடிப்படையில் பத்திரிகையாளரான அவர் முதல் படத்தை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார். அது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. முக்கியமாக இருளர் இன மக்கள் மீது அனைவரது கவனத்தையும் திருப்பி; பெரும் உரையாடலை தொடங்கிவைத்தது. சூர்யாவின் கரியரிலேயே ஆகச்சிறந்த படமாக கொண்டாடப்பட்டது.

கமர்ஷியல் கதைகளுக்குத்தான் ரஜினி முக்கியத்துவம் கொடுப்பார் என்ற பேச்சு எழுந்திருக்கும் சூழலில் சமூக அக்கறையுள்ள இயக்குநருடன் அவர் கைகோர்த்திருப்பதால் ரஜினியின் கரியரிலும் அந்தப் படம் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக அவர் நடிக்கிறார்; ப்ளாஷ்பேக் காட்சியில் காவல் துறை அதிகாரியாக தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் கொச்சினில் செட் போடப்பட்டு எடுக்கப்படும்; மேலும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் நடைபெறலாம் என தெரிகிறது. நிலைமை இப்படி இருக்க படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்களுக்கு படக்குழு சமீபத்தில் அழைப்பும் விடுத்திருந்தது. மேலும் சில நாட்களுக்கு முன்பு ரஜினிக்கு லுக் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது. தாடியையும், முடியையும் பக்காவாக ட்ரிம் செய்து ரஜினி மாஸாக இருந்ததாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்தனர்.

இந்நிலையில் படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஞானவேல் ஃபகத்திடம் கதையை சொல்லிவிட்டதாகவும் அது அவருக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாமன்னனில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் ஃபகத்.மேலும் கடந்த வாரம் அவர்தான் ட்ரெண்டிங்கில் இருந்தார்.சூழல் இப்படி இருக்க ரஜினியுடன் அவர் நடித்தால் சம்பவம் வேறு மாதிரி இருக்குமே என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இதற்கிடையே தலைவர் 170 படத்துக்கு வேட்டையன் என பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில்தான் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்