முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கே வி என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஜனவரி மாதமே திரைக்கு வர வேண்டிய இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
எனினும் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஜனநாயகன் படத்துக்கு சென்சார் தரப்பில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் இன்று அந்த படம் வெளியானது. தமிழகத்தில் 800 தியேட்டர்கள் உலகம் முழுவதும் 8000 தியேட்டர்கள் என ஜனநாயகன் படம் இன்று காலை ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே பாபி தியோல் மமிதா பைஜூ கௌதம் வாசுதேவ் மேனன் பிரகாஷ்ராஜ் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் காலை 9 மணிக்கு ஜனநாயகன் படம் வெளியானது. கேரளா கர்நாடகா பகுதிகளில் காலை 6 மணிக்கும் ஆந்திரா தெலுங்கானாவில் காலை 8 மணிக்கும் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனது.
சென்னையில் கேசினோ தேவி ரோகிணி சத்யம் காசி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட தியேட்டர்களின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். விஜயின் பாடலுக்கு நடனமாடியும் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை ரசிக்கள் வெளிப்படுத்தினர். விஜயின் இறுதி திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் பெரிய உற்சாகமான திருவிழாவாக இந்த படம் வரவேற்கப்பட்டது.
தமிழகத்தின் அமைச்சர்கள் அருண்ராஜ் புஸ்லி ஆனந்த் பர்வேஷ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தவெக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் திரையரங்குகளில் ஜனநாயகன் படத்தை காண உற்சாகமாக வந்தனர். மேலும் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு லட்டு கொடுத்து படம் பார்க்க வந்த ரசிகர்களை வரவேற்றார். படம் பார்த்த அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் விஜய் ரசிகர்கள் என பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஏனென்றால் தி லாஸ்ட் ஒன் டைம் என்ற வகையில் இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை பலரும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதபடி பார்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுவரை நடிகர் விஜய் நடித்த படங்களை பார்த்த மக்கள் இப்போது தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்தை பார்த்து ரசித்தனர். படம் பார்த்த ரசிகர்கள் மீண்டும் விஜய் நடிக்க வரவேண்டும். முதலமைச்சராக இருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





