வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்ற ஒரு நடிகராக மாறிவிட்டார். முதல் படத்திலேயே கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருந்தார். எந்த இடத்திலும், காமெடியன் சூரி, அவரிடம் எட்டிப் பார்க்கவே இல்லை என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து விடுதலை 2 படத்தின் வரவுக்காக, ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர். ஆனால் வெற்றிமாறன், இன்னும் படப்பிடிப்பை முடிக்காமல் நீட்டித்துக் கொண்டே போகிறார். படத்தில் வரும் சூரி தவிர்த்த மற்ற கேரக்டர்களுக்கான கிளைக் கதைகளை அவர் விரிவு செய்துக்கொண்டே போவதால், படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போகிறது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்திவிட்டு பிறகு, மாற்றங்களும் திருத்தங்களும் செய்து, எடுத்தக் காட்சிகளை வேண்டாம் என்று நிராகரிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் படத்தின் பல காட்சிகளை ரிவ்யூ பார்த்த வெற்றிமாறன், விசாரணை படம் போலவே பல காட்சிகள் இருப்பதாக சொல்லி, மேலும் 20 நாட்கள் படப்பிடிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் சூரி நடிப்பில், கருடன் படம் நேற்று வெளியானது. துரை செந்தில்குமார் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் சூரியை பொருத்த வரை, முதல் முறையாக நடித்த விடுதலை படத்தின் வெற்றியை விட, அவரது 2வது படமான கருடன் படத்தின் வெற்றி மிக முக்கியம். ஏனெனில் முதல் படம் வெற்றிமாறன் படம். கருடன் படம் வெற்றிதான், அடுத்தடுத்த சூரி படங்களின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய உண்மை.
இந்நிலையில், கருடன் படத்துக்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 4 கோடி வரை இந்த படம் வசூலித்துள்ளது. படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. சூரி நடிப்பிலும் வெளுத்து வாங்கியுள்ளார். அதனால் வரும் நாட்களில் கருடன் படம் ரூ. 50 கோடி வரை வசூலை தொடும் என்றும் கூறப்படுகிறது. அதனால் இனி ஹீரோவாக சூரியை புக் செய்ய டைரக்டர்களின் வரிசை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.





