தமிழக முதல்வராக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களை கடந்தும் இன்னும் திமுக குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் விஜய் பேசுவது தமிழக மக்களை கடுப்படைய செய்து வருகிறது. நிர்வாக திறமை இல்லாத முதல்வர்கள் வரிசையில் முதலிடம் பெற்றவர் விஜய் என்று கருத்து கணிப்பு வெளியான நிலையில் விஜயின் செயல்பாடும் பேச்சும் மக்களுக்கு கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் விஜய் திமுக குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே.
இன்று மதுராந்தகம் ஷூட்டிங்கில் உங்களின் டயலாக் டெலிவரியையைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி’ என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க? எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் பா.ஜ.க என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென லைவ்-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





