ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் ஆன “காவாலியா” பாடல் வெளியானது. அந்த பாடலில் தமன்னாவின் நடனம் காண்பவர்களை மயக்கியது என்று கூட சொல்லலாம்.

“காவாலியா” பாடலை தொடர்ந்து நேற்று இத்திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிளான “Hukum” பாடல் வெளியானது. இதில் “இங்க நான்தான் கிங், நான் வச்சதுதான் ரூல்ஸ், அந்த ரூல்ஸை நான் அப்பப்போ மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்ன்னு கேட்டு ஃபாலோவ் பண்ணனும். அதை விட்டுட்டு எதுவும் அடாவடித்தனம் பண்ணனும்ன்னு நினைச்ச, உன்னை கண்டந்துண்டமா வெட்டி கலைச்சு போட்டிடுவேன்” என்று ரஜினிகாந்த் தொடக்கத்தில் ஒரு வசனத்தை பேசுகிறார்.
அதன் பின் இந்த பாடலில், “பேரை தூக்க நாலு பேர், பட்டத்தை பறிக்க நூறு பேர்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளை நடிகர் விஜய்யை தாக்கி எழுதியுள்ளதாக பலர் டீகோட் செய்து வரும் நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், தனது டிவிட்டர் பக்கத்தில் “பேரை பறிக்க நாலு பேர்” என்ற வரிகளை டீகோட் செய்யும் விதமாக அந்த நான்கு பேரும் இவர்கள்தான் என்று சில நடிகர்களை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது “கம்மாண்டர், பிரின்ஸ், தொட்டி ஜெயா, கேப்டன் மில்லர்” என்று அதில் கூறியுள்ளார். இதில் கம்மாண்டர் என்று விஜய்யை கூறுவதாக தெரிய வருகிறது. அதன் பின் சிவகார்த்திகேயனை குறிக்கும் வகையில் “பிரின்ஸ்” எனவும் சிம்புவை குறிக்கும் வகையில் “தொட்டி ஜெயா” எனவும் தனுஷை குறிக்கும் வகையில் “கேப்டன் மில்லர்” எனவும் அதில் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.





