இயக்குனர் ஷங்கர், தற்போது “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருவது கோலிவுட் ரசிகர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கி வருகிறது.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிவில் ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர்கள் பல பேர் இருந்தார்கள். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அந்த போக்கு அப்படியே மாறியது. ஒரு இயக்குனர் ஒரு வருடத்திற்கு ஒரு படமோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படமோ இயக்கும் நிலைமை தற்போது இருக்கிறது.
இவ்வாறு ஒரு நிலை இருக்க, இயக்குனர் ஷங்கர், ஒரே சமயத்தில் அதுவும் இரு வேறு மொழிகளில் வெவ்வேறு திரைப்படங்களை இயக்கி வருவது ஷங்கருக்கு சினிமாவின் மீது எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இயக்குனர் ஷங்கர் என்றாலே நமக்கு முதலில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைதான் நினைவிற்கு வரும். ஒரு சிறு பாடலாக இருந்தாலும் அந்த பாடலை எந்தளவுக்கு பிரம்மாண்டமாக படமாக்க முடியுமோ அந்தளவுக்கு பல கிராபிக்ஸ்களை பயன்படுத்தி ரசிகர்களை அசரவைப்பார். ஆதலால் ஷங்கர் திரைப்படங்கள் என்றாலே பட்ஜெட் எகிறிவிடும்.

இந்த நிலையில் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கி வரும் “கேம் சேஞ்சர்” திரைப்படத்திலும் அதே சம்பவம் நடந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் 5 பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த 5 பாடல்களுக்கு மட்டுமே ரூ.91 கோடிகள் செலவாகி உள்ளதாம்.
மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் படத்திற்காக ஏற்கனவே முடிவாகியிருந்த பட்ஜெட் இன்னும் எகிற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளாராம். மேலும் ஷங்கரிடமும் இது குறித்து புலம்பி உள்ளாராம். இவ்வாறு “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே பட்ஜெட் குறித்து சிறு விரிசல் ஏற்பட்டுள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் தெரிவித்துள்ளார்.





