இன்று நடிகர் கேபிஒய் பாலா நாயகனாக அறிமுகமான காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதை என்னவென்றால், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்பவர் பாலாஜி சக்திவேல். அவரது மனைவி அர்ச்சனா. முதுமையான வயதிலும் அவர் மீது காதலாக இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
அதனால் தங்களுக்கு 60வது வயது கல்யாணம் செய்ய அவர் ஆசைப்படுகிறார்.
ஈவண்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் படத்தின் ஹீரோ பாலாவிடம் சென்று, தங்களது 60வது வயது திருமணத்திற்கான பட்ஜெட் எவ்வளவு என்று கேட்கிறார். அவர் 52 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். சொந்த ஊரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 80 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு அந்த பணத்தை சென்னைக்கு கொண்டு வருகிறார் பாலாஜி சக்திவேல்.
இதையடுத்து பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா 60வது வயது திருமண ஏற்பாடுகள் துரிதமான நடக்கின்றன. அப்போது பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்துகிறது. அதனால் பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் பணத்தை பயன்படுத்த முடியாத சிக்கல் ஏற்படுகிறது. பணத்தாசையால் அப்போது பாலாவும் சில வேலைகளை செய்கிறார். இத்தகைய தடைகளை மீறி பாலாஜி சக்திவேல் – அர்ச்சனாவின் 60வது வயது திருமணம் நடந்ததா? என்பதுதான் காந்தி கண்ணாடி படத்தின் கதையாக உள்ளது.
ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே கேபிஒய் பாலா நல்ல நேர்த்தியான நடிப்பை தந்திருக்கிறார். நாயகி நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் முன்னணி வேடங்களில் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா நடிப்பு சிறப்பாக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஜெய்கிரண் தயாரித்திருக்கிறார். இயக்குனர் ஷெரீப் படத்தை இயக்கி உள்ளார்.
காந்தி கண்ணாடி படத்தில் வயதான தம்பதியின் 60 வயது திருமண ஆசை, அவர்களின் முந்தைய வாழ்க்கை பின்னணி, இப்போதைய சூழ்நிலை, குழந்தை இல்லாத நிலையில் முதுமையிலும் அவர்கள் காட்டுகிற பாசம், புரிதல் ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்டுகளாக இருந்து படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன.
ஆனால் சீரியஸ் கதையில் பல இடங்களில் அழுத்தமான காட்சிகள் இல்லை. சீரியஸான சில காட்சிகளை காமெடியாக மாற்றியிருக்கின்றனர். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களின் மனதில் நிற்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களை மனம் கலங்க வைக்கிறது. காமெடி நடிகராக இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் பாலா, படத்தில் காமெடி கலந்த ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்த்தால் முதல் படத்திலேயே அழுத்தமான ரோலில் நடித்து பெயர் வாங்கிவிட்டார். காந்தி கண்ணாடி ரசிகர்கள் விரும்பி பார்க்கிற ஒரு படமாக தான் இருக்கிறது.





