தமிழ் சினிமா வரலாற்றில், கடந்த 47 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தி என்ற பெயருடன், புகழ் மிக்க மனிதராக வாழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. ஒரு இசைக் கலைஞராக அவர் செய்த சாதனைகள் ஏராளம். பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் வசீகரித்து வசப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா.
ஆனால் இசையை தவிர்த்த தனிமனிதராய், அவரது செயல்களும், பேச்சும் பல விதங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. நான் இசையமைத்த பாடல் எனக்கு மட்டுமே சொந்தம் என்று, அவரது பல ஆயிரக்கணக்கான பாடல்களை தன் இனிமையான குரலில் பாடிய எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கே நோட்டீஸ் அனுப்பியவர்தான் இளையராஜா.
அதுமட்டுமின்றி தன் சொந்த தம்பி, கங்கை அமரனையே பல ஆண்டுகளாக விலக்கி வைத்திருக்கிறார் இளையராஜா. சமீபத்தில் இளையராஜா மகள் பவதாரணி மறைவுக்கு கூட கங்கை அமரன் செல்ல முடியாத அளவுக்கு, சொந்த சகோதரன் மீதே அதீத வன்மமும், கோபமும் கொண்டவராக இருப்பவர்தாான் இளையராஜா.
ஆனால், சமீபத்தில் எழுத்து வரிகளும், இசையும் கலந்துதான், ஒன்று சேர்ந்ததுதான் பாட்டு என பேசிய கவிஞர் வைரமுத்து, இதைக்கூட அறியாதவன் அஞ்ஞானி என பொதுவாக தான் கூறியிருந்தார். ஆனால் இதைக் கேட்டு வெகுண்டு எழுந்த கங்கை அமரன், வைரமுத்துவை கண்டபடி திட்டி பேசியிருந்தார். இளையராஜாவின் ஒரே தம்பி நான் என்றும், வைரமுத்துவை எச்சரித்து இருந்தார்.
ஆனால், கங்கை அமரனின் இளைய மகன், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜிக்கு, வரும் ஜூன் 9ம் தேதி, திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடக்கிறது. அதற்காக திருமண அழைப்பிதழ்களை அவரது குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதான நிலையில், அவருக்கு திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடந்து ஒரு மாதம் கழித்து, சென்னையில் ரிஷப்சன் நடத்தப்பட உள்ளது.
ஆனால் அந்த திருமண அழைப்பிதழில், எந்த இடத்திலும் இளையராஜா பெயர் இல்லை. கங்கை அமரனின் உடன் பிறந்த அண்ணன், பிரேம்ஜிக்கு சொந்த பெரியப்பா, உலகமே போற்றும் இசைஞானி இளையராஜா பெயரை, அந்த பத்திரிகையில், அவரது சொந்த தம்பி கங்கை அமரன் முற்றிலுமாக தவிர்த்து விட்டார். சொந்த மகன் கல்யாணத்துக்கு உடன் பிறந்த சொந்த அண்ணனையே அழைக்காதவர், எதற்கு வீடியோவில் மட்டும், இளையராஜாவின் ஒரே தம்பி நான் என வீரவசனம் பேசினார், என சமூக வலைதளங்களில் பலரும் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.





