ரஜினிகாந்தின் ராணா திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் பணி நின்றுவிட்டது. இது குறித்து கே எஸ் ரவிக்குமார் மனம் திறந்து உள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, தசாவதாரத்திற்கு பிறகு அடுத்த கட்டமாக மிகப்பெரிய ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று இருந்தேன். இதேபோல் ரஜினியும் எந்திரன் திரைப்படத்தை முடித்துவிட்டு, மிகப்பெரிய ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று இருந்தார். இந்த சமயத்தில்தான் நாங்கள் ராணா படத்தை எடுத்துச் சென்றோம்.
முதலில் அனிமேஷன் திரைப்படமாகத்தான் அதனை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அது, சாதாரண படம் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. அதில் சி ஜி வேலைகள் மிக அதிகமாக இருந்தன. எனக்கும் தசாவதாரம் திரைப்படத்தில் சிஜி பணிகளின் மேல் ஒரு பயிற்சி அனுபவம் கிடைத்துவிட்டது.
எந்திரன் திரைப்படத்தில் சிஜியில் வேலை புரிந்தவர்கள் உடன் அப்படியே இணைந்து, தீபிகா படுகோன்னை கதாநாயகியாக வைத்து ஒரு பாடலையும் எடுத்து விட்டோம். அப்போதுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதனால் அந்த சமயத்தில், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விலகி விட்டனர்.
ரஜினியுடன் இத்தனை வருடங்கள் இணைந்த எனக்கு, வேறு படத்திற்குச் செல்ல மனமில்லை. அந்த சமயத்தில் விஜயுடன் இணைய வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டேன். பிறகு சிங்கப்பூரிலிருந்து ரஜினி வந்தபோது அவரை ஒரு வருடத்திற்கு ஓய்வு எடுக்க சொன்னார்கள். இதனால் லண்டனில் ஒரு ஸ்டூடியோவில் படத்தை முழுவதும் எடுக்க திட்டமிட்டோம்.
இதனால் அனிமேஷனிலேயே அந்த படத்தை எடுக்க முடிவு செய்து விட்டேன். எனக்கு அனிமேஷன் தெரியாது என்பதால், அதை நன்கு அறிந்த ரஜினியின் மகள் சௌந்தர்யா உள்ளே வந்தார். அப்போது கதை தேவைக்காக ராணாவிற்கு ஒரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய கோச்சடையான் உருவானது. இது நன்றாகவே இருக்கிறதே என்று கூறிய ரஜினிகாந்த், கோச்சடையான் கதையை பாத்திரத்தை இரண்டாம் பாதியில் கொண்டு வரச் சொன்னார்.
இப்படிதான் கோச்சடையான் அனிமேஷன் திரைப்படம் உருவானது. ஆனால் இன்னும் ராணா திரைப்படத்தின் கதை மற்றும் வசனம் அடங்கிய ஸ்கிரிப்ட் இன்னும் என்னிடம் அப்படியே இருக்கிறது. ஆனால் இதனை பெரிய ஹீரோக்கள் செய்தால் தான் நன்றாக இருக்கும். ரஜினி அல்லது அஜித் இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.





