தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் அஜீத்குமார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி. இதில் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நாயகியாக திரிஷா வில்லனாக அர்ஜூன் நடித்திருந்தனர்.
பெரிய எதிர்பார்ப்பில் வெளியான விடாமுயற்சி படம் தமிழ் சினிமாவில் வித்யாசமான புதிய கதைக்களத்தில் இருந்தது. ஆங்கில படம் போல உருவான இந்த படத்தில் எந்தவிதமான மசாலா தனங்களும் இல்லாமல் ஒரு மாறுபட்ட கேரக்டரில் அஜீத்குமார் நடித்திருந்தார். ஒரு தரப்பு ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்த நிலையில், பெரும்பாலானவர்களுக்கு இந்த படம் திருப்தியளிக்கவில்லை.
ஆனால் கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 240 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ள இந்த படத்தின் வெற்றியால் நடிகர் அஜீத்குமார் உற்சாகமாக இருக்கிறார். அதனால் அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அஜீத்குமாரின் போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகி விட்டார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்கள் சீனியர் நடிகர்களாக உள்ளனர். அதனால் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நடிகராக அஜீத்குமார் மட்டுமே இருந்து வருகிறார்.
விஜய் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் அடுத்ததாக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பலரது கவனமும் அஜீத்குமார் பக்கம் திரும்பியுள்ளது. அதுவும் குட் பேட் அக்லி படத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் அஜீத்குமாரின் இமேஜை இன்னும் பலமடங்கு அதிகரிக்க செய்துள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமாரும் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது இதுவரை அவரது பல படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி மீசை தாடியுடன் நடித்தார். இளமையான தோற்றத்தில் நடித்த குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை பெற்றதால், இனி இளமையான கதைகளில் இளமையான தோற்றத்தில் நடிக்க அவர் முடிவு செய்திருக்கிறார். அதுபோன்ற கதைகளை எழுதுமாறு தனது அபிமான இயக்குனர்களிடம் அஜீத்குமார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.





