நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. பல ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு படமாக இப்போது குட் பேட் அக்லி வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூலை உலகளவில் கடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 115 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தை பொருத்த வரை இது அஜீத்குமார் ரசிகர்களை திருப்திபடுத்தும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு படமாக மட்டுமே உள்ளது. கதை திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்காமல் காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மட்டுமே இந்த படம் உருவாகி உள்ளது.
நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒரு ரசிகராக மாறி இந்த படத்தை இயக்கி உள்ளார். தீனா பில்லா அமர்க்களம் வரலாறு வாலி போன்ற படங்களின் ரெபரென்ஸ் ஆக மட்டுமே இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.
இதுதவிர தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ஒத்த ரூபா தாரேன் என் ஜோடி மஞ்சக்குருவி இளமை இதோ இதோ என சில சூப்பர் ஹிட் பாடல்களையும் படத்தில் கொண்டு வந்து ஏகப்பட்ட வைப் தந்து ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்து கொண்டாட்டம் போட வைத்திருக்கிறார். 7 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் என்பது ஒரு அசகாய சாதனையாக தான் உள்ளது.
இப்போது வெளிநாடுகளில் கார் ரேஸில் கலந்துக்கொண்டுள்ள நடிகர் அஜீத்குமார், குட் பேட் அக்லி படத்தின் அபார வெற்றியால் பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார். அதனால் தனது அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே தந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு கதை சொல்லியும் இருக்கிறார் ஆதிக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே குட் பேட் அக்லி படம் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற மே 9ம் தேதி அல்லது 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 90 கோடி விலை கொடுத்து டிஜிட்டல் ரைட்ஸ் உரிமம் பெற்றுள்ளது. திரையரங்குகளில் கிடைத்த மாஸ் வரவேற்பு, ஓடிடி தளத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





