அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் வங்கி கொள்ளையையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக போட்டியாக களமிறங்கிய வாரிசு தடம் தெரியாமல் அழித்தது துணிவு என்றே சொல்லலாம்.
இதனால் உற்சாகமடைந்த அஜித் அடுத்தடுத்து பல படங்களில் விரைவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ விடாமுயற்சியில் கமிட்டாகிவிட்டு பல மாதங்கள் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். ஒருவழியாக விடாமுயற்சி ஷூட்டிங்கானது அஜர்பைஜானில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங்கை விரைந்து முடித்துவிட்டு அடுத்த வருடத்தில் படத்தை ரிலீஸ் செய்ய மகிழ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலுக்கு பிறகு அபுதாபி, துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்காம்.
இந்த சூழலில் விடாமுயற்சி நிலையே என்னவென்று தெரியாமல் இருக்கும் சூழலில் அஜித்தின் 63ஆவது படம் குறித்த தகவல் ஒன்று வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. அதன்படி மார்க் ஆண்டனி ஹிட் மூலம் கவனம் ஈர்த்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். மார்க் ஆண்டனி வெற்றியைக்கூட அவருக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார். அவர் அஜித்தை சந்தித்து கதை சொன்னாராம்.
அந்தக் கதை அஜித்துக்கு பிடித்துப்போக ஓகேயும் சொல்லிவிட்டாராம். படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. நிலவரம் இவ்வாறு இருக்க புதிய தகவல் ஒன்று படம் குறித்து வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அஜித்துக்கு கடைசியாக கிரீடம் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





