சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். அந்தப் படம் மீது அவரும் அவரது ரசிகர்களும் ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். காரணம் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்ததுதான். சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அந்தப் படம் வெளியானது.
ரஜினியின் ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தை உருவாக்கியிருந்தார் நெல்சன். இதன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இதுவரை 700 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருக்கிறது. மேலும் அமேசான் ப்ரைமிலும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. எனவே ரஜினியும், அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
அதிலும் சன் பிக்சர்ஸ் ரொம்பவே உற்சாகமாகியிருக்கிறது. ஏனெனில் அந்த நிறுவனம் இதற்கு முன் ரஜினி நடிப்பில் தயாரித்த அண்ணாத்த, விஜய் நடிப்பில் தயாரித்த பீஸ்ட் ஆகிய படங்களும் சரியாக போகவில்லை. ஆனால் ஜெயிலரோ விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பந்தயம் அடித்திருப்பதால் அடுத்தும் ரஜினியோடு இணைந்திருக்கிறது. சின்ன மாறுதலாக லோகேஷ் அந்தப் படத்தை இயக்குகிறார். அதேசமயம் நெல்சன் திலீப்குமாருக்கும் இன்னொரு வாய்ப்பை கொடுக்க கலாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சூழல் இப்படி இருக்க ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ காரையும், நெல்சன் திலீப்குமார் மற்றும் அனிருத்துக்கு போர்ஷே காரையும் பரிசாக கொடுத்தார் கலாநிதி. மேலும் அவர்களுக்கு ஒரு செக்கையும் பரிசாக கொடுத்தார். இந்த செக்கானது சம்பளம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் படக்குழுவினருக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து செமத்தியான விருந்தும் வைக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட செக்கில் இருந்த தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ரஜினிக்கு 30 கோடி ரூபாய் செக்கும், நெல்சனுக்கு 5 கோடி ரூபாய் செக்கும், அனிருத்துக்கு இரண்டு கோடி ரூபாய் செக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
முன்னதாக ரஜினிக்கு கொடுத்த செக்கில் ஜெயிலர் படம் சம்பாதித்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கான தொகைதான் இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஜெயிலர் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 250 கோடி ரூபாய்வரை லாபம் பார்த்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.





